2023-24 கல்வியாண்டில் அறுபத்தைந்து லட்சம் மாணவர்கள் பத்தாவது, பன்னிரண்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது தேசியக் கல்வி அமைச்சகம். தேசியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களைவிட மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் தோல்வி விகிதம் அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வு கூறுகிறது. தேர்ச்சி பெறாதவர்கள் எண்ணிக்கையில் எப்போதும் போல ஆண் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தேசிய அளவில் பள்ளிக் கல்வித் திட்டத்தில் பத்தாவது வகுப்பும் பன்னிரண்டாம் வகுப்பும் முக்கியமானவை. மாணவர்கள் அவர்களுடைய அல்லது அவர்களின் பெற்றோர்களுடைய விருப்பத் துறையில் எதிர்காலத்தில் பணிபுரிவதுதான் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் முறை. அதற்குப் பத்தாம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் அவர்கள் விரும்பும் துறை தொடர்பான பள்ளி உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்க இயலும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பள்ளி உயர்கல்வியை நிர்ணயிக்கின்றன. அதே போலப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண்களை வைத்துத்தான் அவர்கள் விரும்பும் துறை தொடர்பான கல்லூரிப் படிப்பைத் தேர்ந்தெடுக்க முடியும். மாணவர்கள் பெறும் அதிகமான மதிப்பெண்கள் அடிப்படையில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்.
இந்திய அளவில் ஐம்பத்து ஆறு மாநிலக் கல்வித் திட்டங்களும் மூன்று தேசியக் கல்வித் திட்டங்களும் உள்ளன. இந்த அனைத்துக் கல்வித் திட்டங்களையும் பகுப்பாய்வு செய்து முடிவுகளை வெளியிட்டிருக்கிறது தேசியக் கல்வி அமைச்சகம். பத்தாம் வகுப்பு பயிலும் சுமார் 33.5 லட்சம் மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்லும் தகுதி நிலையை அடையவில்லை. அவர்களில் 5.5 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவில்லை. இருபத்தெட்டு லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதே போலப் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 32.4 லட்சம் மாணவர்கள் அடுத்த நிலைக்குச் செல்லும் தகுதியைப் பெறவில்லை. அவர்களில் 5.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 27.2 லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். உயர்நிலை வகுப்புகளின் குறைந்த சேர்க்கை விகிதமும் மொத்தச் சேர்க்கை விகிதமும் குறைந்திருப்பதற்கு இதுவே காரணம்.
Add Comment