பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற கேள்விதான் முதலில் வரும். மத்தியக் கிழக்கு நாடுகளில் எங்கு மிசைல்கள் விழுந்தாலும் இந்தக் கேள்வியும் வந்துவிடும். கூடவே “மூன்றாவது உலகப் போர் ஆரம்பிக்கப் போகிறதா?” என்கிற முக்கியமான கேள்வியும்.
சனிக்கிழமை அன்று, முதன் முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் நடத்தியது ஈரான். இஸ்ரேல் ராணுவத் தளங்களைக் குறிவைத்து நடந்தது இத்தாக்குதல். சுமார் 170 ட்ரோன்கள், முப்பதுக்கும் மேற்பட்ட க்ரூய்ஸ் மிசைல்கள், 120க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் மிசைல்கள் அனுப்பப்பட்டன.
நெவிடம் ஏர் பேஸ், அராட் ரீஜியன், கோலன் ஹைட்ஸ், இஸ்ரேல் ஏர் பேஸ் உள்ளிட்ட இடங்களில் சில மிசைல்கள் விழுந்து வெடித்தன. ஆனால் 99 சதமானம் மிசைல்கள் வானிலேயே இன்டர்செப்ட் செய்து வீழ்த்தப்பட்டன. சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த இத்தாக்குதலில் அமெரிக்கா, யுகே, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேலுடன் இணைந்து மிசைல்களை வீழ்த்தின. 10 வயதுச் சிறுமிக்குக் காயம் ஏற்பட்டதைத் தவிர வேறெந்த அசம்பாவிதமும் நிகழவில்லை.
Add Comment