யூட்யூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கி மீண்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். லைக் போடுங்க, கமென்டு போடுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க என்று சொல்வதுபோல ஒவ்வொரு வீடியோ வெளியிட்ட பிறகும் மன்னிச்சிடுங்க என்று கேட்க ஆரம்பித்துவிடுவார் போல.
இர்ஃபான்ஸ் வ்யூ எனும் தலைப்பில் யூடியூப் சானல், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் லட்சக்கணக்கானவர்கள் இவரைப் பின்தொடர்கிறார்கள். இவற்றில் இவர் வெளியிடும் வீடியோக்களுக்கு மக்களிடமிருந்து கிடைக்கும் ரெஸ்பான்ஸ்களைப் பொறுத்து இவரது வருமானம் அமையும். ஆரம்பக்கட்டத்தில் உணவு சம்பந்தப்பட்டக் காணொளிகளில் அதிக கவனம் செலுத்தினார். பின்தொடர்பாளர்கள் அதிகமான பின்பு வெவ்வேறு துறைகளிலும் கால்பதித்து சமூகவலைத்தளங்களில் தனக்கென்று ஓர் இடம் பிடித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள காணொளிகளில் லைக்ஸ்களும், பார்வைகளும், கமெண்ட்டுகளும் நிரம்பி வழிகின்றன. அதில் மக்களிடமிருந்து அருமை, அபாரம் என்கிற பாராட்டுதல்கள் அதிகம் கிடைத்திருந்தாலும், என்னப்பா தம்பி, வ்யூஸ்களுக்காக என்ன வேணா செய்வியா நீ எனும் ரீதியில் விமர்சனங்களும் இல்லாமல் இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு இர்ஃபான் தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தினை வெளிநாட்டில் பரிசோதனை செய்து, அதன் முடிவை அவரது சானல்களில் வெளியிட்டார். அவரது நண்பர்களும், நலன் விரும்பிகளும் அதனைக் கொண்டாடினாலும் இந்திய நாட்டுச் சட்டத்தின்படி அது தவறானதால் விமர்சனங்களை எதிர்கொண்டார். அதன் காரணமாகவே அந்தக் காணொளி அதிகப்படியான வரவேற்பினைப்பெற்று டிரெண்டிங் ஆனது. பின்பு அந்த விஷயத்தில் சட்டப் பிரச்சினை ஏற்பட்டதால் இர்ஃபான் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். குழந்தையின் பாலினத்தினை வெளியிட்டது துபாய் நாட்டில் உள்ள மருத்துவமனை என்பதால் அவர் மீதும் மருத்துவமனை மீதும் எந்த நடவடிக்கையும் சட்டப்படி எடுக்க முடியவில்லை. விவகாரத்தினை இர்ஃபான் அத்துடன் முடித்திருக்கலாம். ஆனால் பிரபல யூடியூபர் ஆயிற்றே. விட்டுவிடுவாரா?
Add Comment