சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்த ஒரு நாள். 1997 ஆம் ஆண்டு. சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஒரு ரெய்டுக்காகச் சென்று கொண்டிருந்தார். ஜீப்பில் அவருடன் சக காவலர்களும் இருந்தார்கள். அப்போது தற்செயலாக வழியில் பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு விபத்தில் சிக்கிய பேருந்தைப் பார்த்தார்கள். பாலத்தில் இருந்து தொங்கிக் கொண்டு கீழே தண்ணீரில் சிறிது மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்தது. இதைப் பார்த்த சைலேந்திரபாபு நீச்சல் தெரிந்த காவலர்களுடன் துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்டார். சென்று கொண்டிருந்தது கள்ளச் சாராய ஊறல்களை அழிக்கும் ரெய்டுக்கு. எனவே ஜீப்பில் கடப்பாரை போன்ற பொருட்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு பேருந்தினைக் குத்திக் கிழித்தும், ஜன்னலை உடைத்தும் முடிந்தவரை மக்களைக் காப்பாற்றினார்கள். படகுகளுடன் மீட்புப் படையும் வந்து பின்னர் இணைந்தது. சிலர் இறந்திருந்தாலும் 18 பேரின் உயிர் அன்றைக்குக் காப்பாற்றப்பட்டது. பின்னர் இதற்காக பிரதமர் விருதும் பெற்றார் சைலேந்திரபாபு.
அதிரடி சரவெடி காவல் துறை அதிகாரி சைலேந்திரபாபு. பணியில் சேர்ந்ததில் இருந்தே துணிவுடன் செயலாற்றியவர். வீரப்பன் கூட்டாளிகள், நக்ஸலைட்கள், யானை வேட்டைக்காரர்கள் என்று பல குழுக்களுடன் நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டை செய்த அனுபவம் இருக்கிறது. இதற்காக முதலமைச்சர் விருதுகளையும் பெற்றிருக்கிறா.
Add Comment