எங்கள் எள்ளுப்பாட்டி ஒருவர், எங்கள் கிராமத்துப் பூர்வீக வீட்டின் கீழே ஒரு புதையல் மறைந்திருப்பதாக தன் இறுதி நாள் வரையில் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். உண்மையோ, பொய்யோ… அந்த நேரத்து வறுமையைப் போக்கும் ஒரு ஃபேண்டஸி கனவோ தெரியாது. அந்த செவிவழிச் செய்தி எங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் தலைமுறை தலைமுறையாக ஒரு பெருங்கனவென, பெரும் புதிரென தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.
அதற்கான ஆதாரங்களோ, அறிகுறியோ ஏதும் எங்களிடம் இல்லை என்றாலும் – வீட்டை விட்டுக் கொடுத்துவிட்டு வந்த பின்னரும், இன்னும் எங்களின் அடுத்த தலைமுறைக்குக் கதையாக மட்டுமே அதைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லோரின் ஆழ்மனதிலும் அப்படியொரு புதையல் மட்டும் கிடைத்திருந்தால் நம் வாழ்வு எப்படி இருந்திருக்கும் என்கிற குறுகுறுப்பு மட்டும் தொடர்கிறது..
ஆனால் இப்படித் தன் தாத்தா காலத்தில் புதைக்கப்பட்ட ஒரு புதையல் மேப் விஷயத்தை – அந்தக் குறுகுறுப்பை அப்படியே நிறுத்தி விடாமல் தேடிச்சென்று தன் குடும்பத்தின் பழைய பெரும்புதையல் ஒன்றை கைக்கொண்டிருக்கிறார் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஜான் க்ளஸவ்ஸ்கி (Jan Glazewski) என்கிற பேராசிரியப் பேரர்.
Add Comment