கந்து வட்டிக் கடன். மீட்டர் வட்டிக் கடன். மைக்ரோ பைனான்ஸ் கடன். இப்படி எத்தனையோ கடன், வட்டிக் கதைகளை எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அனுபவித்தும் இருப்பீர்கள். இன்ஸ்டன்ட் கடன் ஆப் எனப்படும் செயலிக் கடன் வட்டி பற்றி உங்களுக்குத் தெரியுமா? அனுபவித்திருந்தால் அந்த திக்கிலேயே தலை வைத்துப் படுக்க மாட்டீர்கள். மீட்டர் வட்டி, கந்து வட்டி எல்லாம் தேவலாம்டா சாமி என ஓடி வந்திருப்பீர்கள். அவ்வளவு அபாயம்.
திடீர் செலவுகள் என்பது எல்லோருக்குமானது. அப்போதெல்லாம் கடன் வாங்கித்தான் தீர வேண்டியதிருக்கிறது. முப்பது வருடங்கள் முன்பு வரை உறவினர்களிடம் கைமாத்து வாங்கி சமாளிப்போம். அதுவே பின்னர் நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் என மாறியது. என்னதான் கஷ்டம் வந்தாலும் உறவுகள், நட்புகளிடம் கடன் கேட்பது கெளரவக் குறைச்சலாகப் பலரும் நினைத்தார்கள். அதில்தான் அடகுக் கடைகள் பெருத்தன. தங்கம் அடகு வைத்தால் போதும். மாதம் நூற்றுக்கு ஒரு வட்டி, ரெண்டு வட்டி என்ற அளவில் நின்றது.
அடுத்து அதுவே பைனான்ஸ், கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று உருமாற்றம் கொண்டது. நூற்றுக்கு ரூபாய் பத்து வரை வட்டி எகிறியது. தினசரி வசூல், வார வசூல் எல்லாம் இதில் நடந்தது. கடன் பத்தாயிரமாக இருக்கும். அதற்கு வட்டி மட்டும் இருபதாயிரம் கட்டி இருப்பார்கள். கடன் அப்படியே ஐந்தாயிரம் கணக்கில் இருக்கும். அதைத் திருப்பிக் கொடுக்கா விட்டால் வீடு புகுந்து பெண்களைத் தொந்தரவு செய்வார்கள். பொருட்களைத் தூக்கிச் செல்வார்கள். ஆட்களைக் கடத்துவார்கள். சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு ஆளே அடையாளம் தெரியாத வண்ணம் கொலையும் செய்து கடலில், ஆற்றில், குளத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள்…
சில வகை கடன் செயலிகள்… செல்பேசியில்..சேமிப்பில் உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் , இவர் எங்களிடம் கடன் வாங்கி இருக்கிறார். இவர் கடன் கட்டும் வரை உங்களுக்கு தகவல் மூலம், கடனை உடனே செலுத்தும்படி நிர்பந்திக்கப்படும் என்ற குறுக்குவழியையும் கையாளுகின்றன. இதன் படி நிறைய நபர்கள், கூச்சப்பட்டு, தற்கொலை முடிவுகளும் எடுத்தார்கள்.. இதை தடுக்க…முறைகேடாக செயல்படும் கடன் செயலிகள் குறித்து https://sachet.rbi.org.in என்ற தங்களின் இணையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.