அமெரிக்கக் கடைகளில் மலைபோலக் குவித்து வைத்திருந்தாலும், அருகில் சென்றால் கூட எலுமிச்சைப் பழங்களில் இருந்து ஏனோ மணம் வீசுவதில்லை. சப்ஜி மண்டி போன்ற இந்தியக் கடைகளுக்குச் சென்றாலும் இதே நிலைதான். ஹூஸ்டனில் என் தம்பி வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதில் இலைகள் தெரியாமல் நிறைய காய்த்து இருக்கும். கோடைக்காலத்தில் தோட்டத்தின் பக்கம் சென்றால், கொஞ்சமே கொஞ்சம் வாசனை வரும். ஆனால், தமிழ்நாட்டு எலுமிச்சை மரங்கள் அப்படி இல்லை.
நெய்வேலி என்றால் நிலக்கரிச் சுரங்கங்களும் முந்திரித் தோட்டங்களும் மட்டும் இல்லை. எனக்கு அது என் மாமா வீட்டு எலுமிச்சை, கடாரங்காய் மரங்களையும் சேர்த்தே நினைவுக்குக் கொண்டுவரும். இலைகளைச் சற்றே நசுக்கி முகர்ந்து பார்த்த கையில் எலுமிச்சை வாசம் நாள் முழுக்க இருக்கும். சின்ன வெளிர் மஞ்சள் நிறப் பூக்களின் வாசம்கூட வீட்டை நிரப்பிவிடும். காய்களும் பழங்களும் நிறைந்து இருக்கும்போது எலுமிச்சை மணம் அந்தத் தெருவை நிறைத்து இருக்கும்.
அந்த நினைவை அப்படியே கொண்டுவருவது நியூஜெர்சியில் இருக்கும் மக்னோலியா மரம். தென்றல் வீசும்போது சிட்ரஸ் வாசம் என் பழையகால நினைவுகளைச் சேர்த்து அழைத்துக்கொண்டு வரும்.














Add Comment