இந்தப் பொழப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சுது. இந்த ஒரு வரியை நமது ருசிஞர் படையின் வேதமாகக் கொண்டு இந்த உணவுக் கட்டுரைகளை அணுகுவோம்.
காய்ச்சலுக்கு வெறும் ரொட்டியைச் சாப்பிட்ட பாவப்பட்ட தலைமுறைகள் உண்டு. அந்த ரொட்டியை உருமாற்றி, பாவ் என்ற பெயரில் காலை உணவாக உண்ணும் பழக்கமுடையவர்கள் மராத்தியர்கள். நம்மூர் இட்லி தோசை போல அவர்களுக்கு பாவ் பாஜியும், வடா பாவ்வும். அறமும் மறமும் சேர்ந்த அரசனைப்போல இவற்றுக்கு பாகுபலியாகத் திகழ்வது தாபேலி.
சுவைத்த பின் நீங்களே பெயர்க் காரணத்தை ஒப்புக்கொள்வீர்கள். மிக்ஸர் சாப்பிட்டு வாய் துடைக்காத குழந்தையைப் போலிருக்கும் தாபேலியின் வெளிப்புறம். குறும்புத்தனத்தை மறைக்கத் தெரியாமல் நிலக்கடலை வெளியே தெரியும். மழலை ரத்தினங்களாக மாதுளை முத்துகள் ஆங்காங்கே அலங்கரிக்கும். முந்திக் கொண்டு நம்மைச் சுவைக்க அழைப்பது வெண்ணெய்யின் மணம். ‘அமுல் வெண்ணெய்யில் தேய்த்துக் குளிப்பாட்டப்பட்ட தாபேலி’ என்று கடைகளில் எழுதி ஒட்டியிருப்பார்கள்.















Add Comment