தமிழ் எழுத்துருவாக்கம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றி வரும் உதயசங்கரைத் தமிழ் இணையம் நன்கறியும். கணித்தமிழ் மாநாட்டில் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசினோம். மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். முப்பரிமாண வரைகலை வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றவர். தொழில் நுட்பத்தைத் தமிழ் மொழிக்குப் பயன்படுத்துவதில் தீவிர முனைப்போடு செயல்படுபவர். வரைகலை, எழுத்துரு, தொல்பொருள் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தத் துறையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
2001ஆம் ஆண்டு AutoCAD படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு Architecture துறை சார்ந்து மிகுந்த ஈடுபாடு இருந்தது. அப்படி ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாகக் கோலங்களை AutoCAD மூலமாக வரைந்து பார்க்கும் எண்ணம் தோன்றியது. அப்போது கணினி பரவலாக இல்லாத காலகட்டம். தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் தொடங்கிய இந்தச் செயலால் 2007ஆம் ஆண்டிற்குள் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கோலங்களை வரைந்திருந்தேன்.
அதற்கு முன்னர் இணையத்தில் கிடைக்கும் கோலங்கள் புகைப்படங்களாகவே இருந்தன. நான் வரைந்த இந்தக் கோலங்களைப் படங்களாக மாற்றி ஆவணப்படுத்த வேண்டுமென நினைத்தேன். 2009ஆம் ஆண்டு இதற்கென ஓர் இணையதளத்தை உருவாக்கி அனைத்தையும் பதிவு செய்தேன். எந்தக் கோலத்திற்கு என்ன பெயர் வைப்பது என்ற கேள்வி இருந்தது. அதற்கென தொடர்ந்து வேலைகள் செய்தேன்.
Add Comment