கல்லூரி ரீயூனியன் கொண்டாட்டத்தில் அடுத்த தலைமுறை வாரிசுகளுடன் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்? தமிழ்இணையம்99 மாநாட்டில் இணையத்தில் தமிழின் போக்கை நிர்ணயித்த வல்லுநர்களும் எதிர்காலத்தில் ஜெனரேட்டிவ் ஏஐ துறையில் சாதிக்கப்போகும் தமிழ்நாட்டு மாணவர்களும் இணைந்து பங்கேற்ற கணித்தமிழ்24 மாநாடு கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது.
பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த முன்னோடிகள் தங்கள் உரை முடிந்த பிறகு அடுத்தடுத்த அமர்வுகளில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர். கேள்விகள் எழுப்பி, கருத்துச் சொல்லி உரையாடி ஆர்வமாகப் பங்கேற்று நிகழ்வுகளுக்கு அர்த்தம் சேர்த்தனர். அந்த காலத்தில்… என்று பலவற்றை நினைவுகூர்ந்து அரங்கைக் கலகலப்பாக்கினர். வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும், தமிழால் ஏற்பட்ட நட்பைத் தொடர்பவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆடுகளம் படத்தில் வரும் களம் 8 மாதிரி இரண்டு நாளும் பரபரப்பாக இருந்தது அரங்கம் 1. ஆழி செந்தில்நாதன் ஒருங்கிணைப்பில் முரசு அஞ்சல் முத்து நெடுமாறன், புராஜக்ட் மதுரை கல்யாணசுந்தரம், மணி மணிவண்ணன், தி.ந.ச.வெங்கடரங்கன் கலந்துகொண்ட உரையாடல் நிகழ்வில் இணைய வரலாற்றையும் எதிர்காலத்தையும் பற்றி உரையாடினர். எவ்வளவு சண்டைகள் போட்டோம் என்பது முக்கியமில்லை, எப்படித் தீர்வினை அடைந்தோம் என்பதே என்றார் நெடுமாறன். சிங்கப்பூர் மாதிரி தமிழ்நாடு அரசு தமிழ் எங்கள் ஆட்சிமொழி என்பதை வலியுறுத்திச் சட்டம் போட்டுத் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தமிழைக் கட்டாயமாகப் பயன்படுத்த வகை செய்யவேண்டும் என்றார் மணிவண்ணன். அவசியமான சட்டம்தான். நாம் செலுத்திய வரியில் நியாயமாகச் சேர வேண்டியதைக் கேட்டாலே பிரிவினைவாதிகள் என்கிறார்கள். சிறப்புச் சட்டம் எல்லாம் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.
மிக நன்றாக நிகழ்வை பற்றி எழுதியுள்ளீர்கள். QR Code என்ற வார்த்தைக்கு தமிழ் சொல் பயின்றேன். ஆனால் செய்யறிவு எந்த ஆங்கில வார்த்தை என்று தெரியவில்லை. இந்த விழா மற்றும் Key note speech you tube உரலி கொடுத்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக அமைந்திருக்கும். நன்றி!
நன்றி. செய்யறிவு என்பது generative AI. என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் யூட்யூப் லிங்க் கொடுத்திருந்தேன். நீங்கள் சொல்வது போல கட்டுரையிலும் சேர்த்திருக்க வேண்டும்.
https://youtube.com/live/__lKoUmS3SU?feature=share
இந்தச் சுட்டியில் நிகழ்வினைப் பார்க்கலாம்.