ஆலயங்களில் நமது வேண்டுதல்களை மௌனமாக மனத்தில் பிரார்த்தித்துக்கொள்வோம். ஒருசிலர் வாய்விட்டுச்சொல்லி வேண்டுவதும் உண்டு. இவற்றுக்கு அப்பாற்பட்டு நமது கோரிக்கைகளை எழுத்துவடிவில் விண்ணப்பமாகக் கொடுத்து, அதனை மூலவரிடத்தில் வைத்துப் பூஜித்து, வேல், கம்பு, ஈட்டி ஆகியவற்றில் கட்டிவைத்து வேண்டுவது என்பது சற்று வித்தியாசமான பிரார்த்தனை முறை.
அதுவும் முருகப்பெருமான் திருக்கோயில் ஒன்றில் இத்தகைய வழிபாட்டு முறை இருப்பது சிறப்பான, தனித்துவமான விஷயம்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் அருள்பாலித்துவரும் கொளஞ்சியப்பர் திருக்கோயிலில்தான் இந்த வழிபாட்டு முறை இன்றளவும் நடைமுறையில் உள்ளது. சுயம்பு மூர்த்தியான முருகப்பெருமான் இங்கு கொளஞ்சியப்பர் என்று அழைக்கப்படுகிறார்.
தங்களுடைய வேண்டுதல்களை முருகப்பெருமானிடம் எழுத்துவடிவில் சமர்ப்பிக்கும் இந்தப் பிரார்த்தனை முறையை இங்குள்ளவர்கள் ‘பிராது கட்டுதல்’ என்று சொல்லுகிறார்கள். இறைவனிடம் முறையிடுதல் என்பதாக இதனைப் புரிந்துகொள்ளலாம்.















Add Comment