கிளாம்பாக்கத்திலொரு பேருந்துநிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்த வெளியூர்ப் பேருந்து நிலையம் அங்கு செல்கிறது. கூடவே இலவச இணைப்பாக உள்ளூர்ப் பேருந்து நிலையத்தையும் துடைத்தெடுத்துக் கொண்டு செல்கிறார்கள். இந்த மாற்றத்தினால் கோயம்பேடு சந்தை அடிவாங்குமா?
1996-ல் கோயம்பேடு சந்தை உருவாக்கப்பட்டது. கொத்தவால்சாவடி சந்தையின் இட நெருக்கடியைக் குறைக்க ஒரு மாற்றுச் சந்தைக்குத் திட்டமிட்டனர். கொத்தவால்சாவடி என்பது ஜார்ஜ் டவுன் என்ற நெருக்கடியான வணிக நகரின் மையப்பகுதி. மாற்று ஏற்பாடாக நகரின் எந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்தாலும் மீண்டும் இடநெருக்கடி ஏற்படும். எனவே சென்னையின் புறநகரில் சந்தையை உருவாக்கத் திட்டமிட்டனர். அதிக அளவில் நிலம் காலியாக இருந்த கோயம்பேடு பகுதி சந்தைக்கான இடமாக முடிவானது.
திட்டம் பெரியது. பெரியது என்றால் ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்ற அளவிற்குப் பெரியது. இதற்காகக் கையகப்படுத்திய நிலம் 295 ஏக்கர்.
ஆரம்பித்த உடன் இன்றையக் கோயம்பேடு சந்தையின் பரபரப்பு வந்துவிடவில்லை. கொத்தவால்சாவடி வியாபாரிகள், பூமார்க்கெட் வியாபாரிகள் தங்களுக்கான வாடிக்கையாளர்களை இழந்துவிட்டதாக வருத்தப்பட்டனர். சந்தை ஆரம்பித்த புதிதில் கோயம்பேட்டில் கடைவாங்கியவர்கள் நட்டமடைந்து கடையை கைமாற்றிவிட்டு பழைய இடத்திற்கே திரும்பவந்து கடைபோட்டுக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
Add Comment