நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் தன்மை (Antimicrobial resistance)
மனிதனின் சராசரி ஆயுள் சில நூறாண்டுகளுக்கு (Bronze and Iron age) முன்பு வரை சுமார் 30-40 வரையாகவே இருந்தது. ஆனால் தற்பொழுது இந்தியர்களின் சராசரி ஆயுள் சுமார் 70. வளர்ச்சியடைந்த நாடுகளில் மனிதர்களின் ஆயுள் சுமார் 80-90 வயது வரை கூட உள்ளது. இந்த அசாத்திய வளர்ச்சிக்குக் காரணங்கள் பல. அவற்றுள் அதிமுக்கியக் காரணமாக இருந்த ஒரு கண்டுபிடிப்பு துரதிர்ஷ்டவசமாகச் சற்றுக் கவலை கொள்ளும் வேகத்தில் தனது திறனை இழந்து வருகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் இந்த இழப்பினைச் சரி செய்யப் போதுமான அளவிற்குப் புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சி எதனையும் நாம் பெரிய அளவில் முன்னெடுக்காமலேயே இருந்து வருகிறோம். கடந்த பல அத்தியாயங்களில் மனிதனின் ஆயுளை நீட்டிப்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். ஆனால் மேற்கூறியுள்ள நிலை தொடர்ந்தால், ஆயுள் நீள்வதற்குப் பதிலாக மீண்டும் குறையத் தொடங்கும்.
மனிதர்கள் மண்ணிற்கும் பொன்னிற்கும் பெண்ணிற்கும் சண்டையிட்டுக் கொண்டு இருப்பதை நாம் தினம் தினம் காண்கிறோம். மதம், இனம், மொழி ஆகியவற்றைக் காரணம் காட்டி பிளவுபட்டு நிற்கிறோம். இந்தக் களேபரத்தில் நம் உண்மையான எதிரியைக் கண்டுகொள்ள மறுக்கிறோம். உண்மையில் நாம் எவ்வளவு பெரிய சிக்கலில் இருக்கிறோம் என்று தெரிந்தால் நாம் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டு இருக்க மாட்டோம். தேவையில்லாத விஷயங்களில் மனம் ஊறிப் போயிருந்தால் தேவையான விஷயங்கள் மறந்து அல்லது மறைந்து போவது இயற்கைதானே. அப்படிதான் இந்தச் சிக்கலையும் கவனிக்கத் தவறியிருக்கிறோம்.
Add Comment