லெபனான் முன்னாள் அதிபர் மைக்கல் அவுன் தன் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்து, வீடு சென்று எட்டு மாதங்கள் ஆகின்றன. கடந்த வருடம் அக்டோபர் முதல் பன்னிரண்டாவது தடவையாக தன் நாட்டிற்கு அதிபர் ஒருவரைத் தேர்வு செய்ய லெபனான் பாராளுமன்றம் தவறிக் கொண்டிருப்பது என்பது நமக்கு வேண்டுமென்றால் ‘இதென்ன விபரீதம்’ என்று பரிதாபத்தை வரவழைக்கலாம். ஆனால் லெபனானியர்களைப் பொறுத்தவரை, தேசியப் பத்திரிகைகளில் எங்கோ ஒரு மூலையில் ,’மூதாட்டி கிணற்றில் விழுந்து மரணத்திற்கு’ அருகில் வரவேண்டிய வெறும் பெட்டிச் செய்தி. இப்படித்தான் மைக்கல் அவுனும் .முப்பது தடவை பாராளுமன்றம் கூடிக் கலைந்த பின்னர் 2016-ம் ஆண்டு தேர்வானவர். அப்போது அதிபர் பதவி இரண்டரை வருடம் வெற்றிடமாய் இருந்தது. நமக்குக் கலாசார அதிர்ச்சியாய்த் தோன்றும் ஒரு விஷயம், இன்னொரு சாராரின் அன்றாடங்களில் ஒன்றாய் அமைவது போலத்தான் இதுவும். அதிபர் இல்லாமல், முறையான நிர்வாகம் இல்லாமல், ஏன் ஆட்சி என்ற ஒன்றே இல்லாமல் Auto Pilot விமானம் போல நாடு இயங்குவது ஒன்றும் லெபனானுக்கோ லெபனானியர்களுக்கோ புதுசு அல்ல.
லெபனான், உலகத்தில் எந்த தேசத்துடனும் ஒப்பிட முடியாத ஒரு தோல்வியடைந்த தேசம். வறுமை, பயங்கரவாதம், இன முரண்பாடு, மதச் சண்டைகள் என்று எல்லா அழிவு வளங்களையும் தாராளமாய்க் கொண்ட ஒரு நாடு அது.பாராளுமன்றம் என்ற ஒன்று இருப்பதும், அதில் கோட் சூட் போட்டவர்கள் கூடி அதிபரைத் தேர்வு செய்ய முயன்று தோற்றுப் போவதும் கூட அங்கே ஆடம்பரம் தான். அந்தளவுக்கு அலங்கோலங்களின் இருப்பிடமாய்த் திகழ்கிறது லெபனான்.
Add Comment