இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, வயது மூப்படைவதனைத் தடுக்கும் மருந்தொன்றை வெளியிட இருப்பதாக, கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல வருடகால ஆய்வு, தற்போது இறுதிக் கட்டத்தினை எட்டியிருப்பதாகவும், ஓரிரு மாதங்களில் இந்தப் புது மாத்திரைகள் சந்தைக்கு விடப்படும் என்றும் பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். செய்தி வெளிவந்து சில நிமிடங்களிலேயே நெட்டிசன்களின் கைகளில் வசமாகச் சிக்கிவிட்டது. மருந்துப் பொருளுக்கான முதல் இருநூற்றி இருபத்தைந்து ஆர்டர்களையும் பாராளுமன்றத்தில் இருக்கும் உயிர்ச்சுவடுகள் கேட்டிருக்கிறார்களாம். ராஜபக்ஷ குடும்பமும், ரணிலின் பரம்பரையும் மருந்தைக் கொள்ளையடிக்க முன்னர் அழித்தே போட்டு விடும்படி பலர் சீரியஸாகக் கருத்துக் கூறி வருகிறார்கள்.
தலைவலி மாத்திரையைக்கூட தலையை அடமானம் வைத்து வாங்கும் ஒரு தீவில் இந்த இளமை மாத்திரையெல்லாம் ஒரு கேடா என்பது பலரின் எண்ணம். அவலங்கள் தினமும் அரங்கேறும் ஓரிடத்தில் இந்த வகை சாதனைகள் கூட பகடிப் பொருளாவதில் ஆச்சரியமேயில்லை. ஆனால், தகவல் உண்மையாயின் இலங்கை வல்லரசாகிவிடும் நாள் நெருங்கி விட்டது என்று அர்த்தம். மொத்த உலகமும் நிச்சயம் இங்கே ஆஜராகி விடும். அறிவியல் ஆய்வுகள் அதிசயத்துப் போகும். சர்வதேச அரங்கில் அத்தனை கேள்வி உள்ள சமாச்சாரம் இது.
Add Comment