கைப்பேசியில் செய்திச் சேனலைப் பார்த்துக்கொண்டிருந்தவர் – ஆளுங்கட்சி ஆதரவாளர்களும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் அடித்துக்கொள்ளாத குறையாய் காட்டுக்கத்தலாய் விவாதித்துக்கொண்டது ஆரம்பத்தில் தமாஷாக இருந்தாலும் மாறி மாறி கேள்வி கேட்டுக்கொள்வதைத் தவிர யாரும் எதற்கும் பதில் சொல்கிற வழியாய் இல்லாததில்,அலுத்துப்போய் டிவியைப் போட்டார். விட்டு விட்டுப் பார்த்துக்கொண்டிருந்த நீண்ட ஆங்கிலத் தொடர் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது. அதில்கூட சுவாரசியம் குன்றியதால்தான் சலித்துப்போய் அந்த இடத்தில் விட்டிருந்தார். ஆனால், அங்குதான் பெரிய திருப்பமே இருப்பது இப்போது பார்க்க ஆரம்பித்த பின்னர்தான் தெரியவந்தது. அவர் அமர்ந்திருந்தது, வசதியாகப் படுத்துக்கொண்டு பார்க்கும்படியான சோபாவாக இருந்தாலும் சுவரை அடைத்துக்கொண்டிருந்த டிவி திரையில் ஓடிக்கொண்டிருந்த காட்சியின் விறுவிறுப்பு அவரை சாயவிடாமல் நிமிர்ந்து உட்காரவைத்திருந்தது.
அது, குளிரூட்டப்பட்ட அவருடைய ஹோம் தியேட்டர் அறை என்பதால், குளிரும் சத்தமும் பெருமளவில் வெளியில் போகாதபடி உள்ளே தாளிட்டிருந்தார். அலைந்துகொண்டே இருக்கவேண்டிய வேலையில் இருந்தவருக்கு ஓய்வுபெற்றபின் அறையே உலகம் என ஆகிவிட்டிருந்தது. எவ்வளவு நேரம்தான் டிவி பார்ப்பார்; புத்தகம் படிப்பார்;எப்படிப் பொழுது போகிறது; அவர் இறங்கியே வருவதில்லையே என அவர்கள் இருந்த பிரம்மாண்டமான வளாகத்தில் அவளுக்குத் தெரிந்தவர்கள் கேட்பதாக நாள் தவறாமல் நடைப்பயிற்சி செய்கிற அவர் மனைவி அடிக்கடிச் சொல்வாள். அவளைத் தெரிந்த அளவுக்கு அவரை அங்கு யாருக்குமே தெரியாது. அவரது மனைவியைத் தெரிந்தவர்களுக்கும் இவர்தான் அவள் கணவர் என்பதுகூட அநேகமாகத் தெரியாது என்று சொல்லிவிடலாம்.
பார்க்க ஆரம்பித்துக் கொஞ்சநேரத்திலேயே தொடர் அவரைத் தனக்குள் இழுத்துக்கொண்டுவிட்டிருந்தது. எதில் ஈடுபட்டாலும் முழுமையாக அதில் கரைந்துவிடுகிற அவர், சாதாரணப் பொழுதுபோக்குத் தொடர்தான் ஆனாலும் மேலை நாடுகளில் என்னமாய் எடுக்கிறார்கள். நாமும் இருக்கிறோமே என்று எண்ணிக்கொண்டு இருக்க, திரையில் திகிலூட்டும் காட்சி, பின்னணி இசையின்றி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கையில் அழைப்பு மணி அடித்தது. முதல்முறை அடித்தபோது, திரையில் கேட்பதாகத்தான் நினைத்தார். இரண்டாவது முறைதான் அடிப்பது அவர் வீட்டு மணி என்பதே உறைத்தது. மொபைலில் மணி பார்த்தார். வாக் போனவள் வர இன்னும் அரைமணி நேரம் இருக்கிறதே. அமேஸானில் கூட ஆர்டர் எதுவும் செய்யவில்லையே. யாரிது. வீட்டு எண்ணைச் சரியாகப் பர்க்காமல் எவனாவது தப்பாக அடிக்கிறானோ என்கிற எரிச்சலுடன், பார்த்துக்கொண்டு இருந்ததை பாஸில் போட்டுவிட்டு, அறைக்கதவைத் திறந்துகொண்டு ஹாலுக்கு வந்தார்.
Add Comment