மெட்ராஸ் பேப்பரின் தொடக்கம் முதல் இன்று வரை இந்தப் பத்திரிகையின், இது உருவாக்கி அளிக்கும் புதிய எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் பதிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் தமது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்:
நாங்கள் பதிப்பகம் தொடங்கி நடந்த மூன்றாவது புத்தகக் கண்காட்சியில்தான் முதல் முதலாக அவரைப் பார்த்தேன். கிழக்கு அரங்கில் தொடர்ந்து வாசகர்களுக்கு கையெழுத்துப் போட்டுக்கொண்டே இருந்தார். யார் இவர் என்று காயத்ரியை கேட்டதற்கு இவரைத் தெரியாதா உனக்கு, பாரா என்றார். ஓஹோ இப்போ பார்த்துட்டேன் என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு எங்கள் அரங்குக்குச் சென்றோம். மறுநாள் எங்கள் அரங்குக்கு வந்து அங்கிருந்த புத்தகங்கள் சிலவற்றைப் பிரித்து வெகுநேரம் பார்த்தார், பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லவில்லை; சென்றுவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து ஹரன் பிரசன்னா எங்களைப் பார்க்கும் போது உங்கள் புத்தகங்களின் வடிவமைப்பு நன்றாக இருப்பதாக பாரா சொன்னார் என்று சொன்னபோது எங்கள் அரங்கில் அனைவருக்கும் சந்தோஷம்.
யார் இந்தப் பாரா என்று தெரிந்து கொள்வதற்கு அவரை முகநூலில் தொடர ஆரம்பித்தேன். அவர் எழுதிய கட்டுரையா இல்லை காணொளியா என்று சரியாக நினைவில்லை. இத்தனை ஆண்டுகாலமாக எழுத்துதான் எனக்கு சோறு போடுகிறது இதைத்தவிர எனக்கு வேறு எதுவுமே தெரியாது என்று அவர் சொன்னது என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு பதிப்பாளனுக்கு, எழுத்தாளர்களால் எழுத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியும் என்பது எத்தனை நிறைவைத் தருகின்ற ஒரு நிலை. அதுவரை அப்படி நான் கேட்டதில்லை; அதற்குப் பின்னும் கேட்டதில்லை. இவருக்கு மட்டும் எப்படி இது சாத்தியப்படுகிறது என்று பார்த்தால் அவரைப் பொறுத்தவரை எந்தத் தளத்தில் எழுதினாலும் அது எழுத்துதான் என்ற அவர் புரிதலே காரணம். வெவ்வேறு தளங்களில் எழுதும் வகை மாறுபட்டாலும் அதுவும் எழுத்துதானே.
வாழ்த்துகள் பாரா & ராம்ஜி. பல்லாயிரம் இதழ்கள் தொடர இறைவனிடம் வேண்டுகிறேன்
அருமையான நினைவலைகள்.