மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் கேரளாவின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலும் நடந்து முடிந்திருக்கின்றன. மூன்றுமே தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களாகப் பார்க்கப்பட்டன. இவைதவிர 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 23ஆம் தேதி வாக்குக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
மஹாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள். பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) உள்ளிட்ட காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஒருபுறம். சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகளோடு பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மறுபுறம் எனக் களம் கண்டன. இரண்டு பலமான கூட்டணிகளுக்கு இடையிலான போட்டியில் வேட்புமனு தாக்கல் நடப்பதற்கு முன்புவரை இருதரப்பிலும் குழப்பங்கள் நீடித்தன. ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி மாநிலம் முழுவதும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 66.5% வாக்குகள் பதிவாகியிருந்தன.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பிரிந்த பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. கூட்டணியாக மட்டுமில்லாமல் தனிப்பட்ட கட்சிகளும் தங்களுடைய பலத்த நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தத் தேர்தல் நடந்தது. பாஜக கூட்டணிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பும் அவர்களுடைய மதரீதியான பிரசாரமும் கைகொடுத்தன. யார் எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரான அரசியல் பேரங்கள் தீவிரமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. அதற்கு வாய்ப்பில்லாமல் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. யார் முதல்வர் என்பதில் தான் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 132 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பலத்தோடு பாஜக, முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறது. எனவே தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் தங்களுடைய பலத்தை நிரூபித்திருக்கின்றனர். பாஜக கூட்டணியின் இந்த வெற்றி சமூக நீதிக்கான வெற்றி என மோடியைப் பேச வைத்திருக்கிறது இந்தத் தேர்தல்.
Add Comment