புத்தகக் காட்சி சீக்கிரம் ஆரம்பித்தால் போதும் எனத் தோன்றத் தொடங்கிவிட்டது.
புக்ஃபேர் தொடங்கிவிட்டால் இந்த ‘கல்லாப்பெட்டி சிங்காரம்’ வேலைக்குக் கல்தா கொடுத்துவிட்டு, சக்கரம் நாவலை எழுத உட்கார்ந்துவிடலாம்.
எனக்கு ஆயுசு 55லிருந்து 60 என்று 23 வயதிலிருந்தே ஜாதகம் கைரேகை என எல்லாவற்றிலும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் இருவரில்லை பார்க்கிற எல்லோரும் சொன்னார்கள். எழுதமுடியாமல் தவித்துக்கொண்டிருந்த 90ல் பழக்கமான இளைய நண்பனும் ‘ஆயுசு உங்களுக்கு 60தான் மாமல்லன்’ என்று அடித்துச் சொன்னான்.
‘ஆனா உங்களுக்கு குருதசை ரொம்ப நல்லா இருக்கும். அன்ஃபார்ச்சுனேட்லி அதைப் பாக்க நீங்க இருக்கமாட்டிங்க’ என்று வேறு சொல்லிவைத்தான், பசியில் தூங்கிக்கொண்டிருக்கிறவனை எழுப்பிச் சோறில்லை தூங்கு என்பதைப்போல.
இன்னும் 28 வருஷம் இருக்கிறதே. இருக்கிறவரை ஜாலியாய் இருந்துவிட்டுபோனால் போதாதா என குறைவான ஆயுள் எனக்குக் குறையாகவே தோன்றவில்லை. எழுதாமல் இருந்ததும் எழுதமுடியாமல் இருப்பதும்தான் உள்ளூர பெருங்குறையாக இருந்துகொண்டிருந்தது.
‘இனி எழுதவே மாட்டேனா’ என்றுகூட அவனிடம் குழந்தைபோலக் கேட்டிருக்கிறேன்.
Add Comment