உலகெங்கும் நகரங்களும், அந்த நகரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகின்றன. மக்கள்தொகை பெருக்கம், போக்குவரத்து வசதிகள், அருகி வரும் கிராமப்புறப் பொருளாதாரம் போன்ற காரணங்களால் மக்கள் தொடர்ந்து பெருநகரங்களுக்குக் குடியேறி வருகின்றனர். இந்தியாவிலும் இதுதான் இன்றைய நிலை.
உலகளவில் இப்போதே நகரங்களில் வசிப்பவர்களின் சதவீதம் கிராமங்களின் வசிப்பவர்களை மிஞ்சிவிட்டது என்று ஐநா சபையின் அறிக்கை கூறுகிறது. அடுத்த இருபத்தைந்து வருடங்களில் உலக மக்கள் தொகையில் 68% பேர் நகரங்களில் வாழ்வார்கள் என்று ஆய்வுகள் கணிக்கின்றன. கல்வி, பொருளாதாரம், மருத்துவ வசதி போன்ற பல காரணங்களுக்காக மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களில் குடியேறுகின்றனர். இந்தக் குடியேற்றங்கள் அங்கு வசிப்பவர்களுக்கு மட்டுமல்லாது, அவற்றை நிர்வகிக்கும் அரசாங்கங்களுக்கும் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. அதில் முதன்மையானது இத்தனை மக்களுக்கான வீட்டு வசதி.
நகரங்களுக்கு இடம்பெயர்பவர்களுக்கு நல்ல வசிப்பிடங்களை உருவாக்கித் தருவதில் பெரும் சிரமங்கள் நிலவுகின்றன. ஒரு நகரத்திற்கு ஒரு வருடத்தில் தோராயமாக எத்தனை லட்சம் பேர் இடம்பெயர்வார்கள் என்பதைக் கணக்கிட முடியாது என்பதால், அதற்கேற்ப வாழ்விட வசதிகளை அரசாங்கங்களால் முன்கூட்டியே கணித்து உருவாக்க முடிவதில்லை. அதனால் நகரங்களைத் திட்டமிட்டுக் கட்டமைக்கவும் முடியவில்லை.













Add Comment