79. இந்தியப் பேரரசர்
காந்தி சர்க்கஸ் பார்த்தார் என்றால் நம்புவீர்களா?
ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் காந்தியிடம் இதைக் கற்பனை செய்வதுகூடக் கொஞ்சம் சிரமம்தான். ஆனால், காந்தி சர்க்கஸ் பார்த்திருக்கிறார், அதுவும், 1915ல், அவர் தன்னுடைய ஆசிரமத்தின் தொடக்கப் பணிகளில் மும்முரமாக இருந்த நேரத்தில்.
மே 30 அன்று, பேராசிரியர் ராமமூர்த்தி என்ற உடற்கட்டாளர் (Body Builder), சர்க்கஸ் கலைஞர் காந்தியை வந்து சந்தித்தார். அடுத்த நாள் (மே 31) காந்தியும் மற்றவர்களும் ராமமூர்த்தியின் நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றார்கள்.
சர்க்கஸ் காட்சிகள் ஆசிரமத்திலிருந்த குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். ஆனால், காந்தி இவற்றை எந்த அளவுக்கு ரசித்தார் என்று தெரியவில்லை.
உண்மையில், இந்தக் காலகட்டத்தில் காந்தி மனத்தளவில் சிறிது சோர்வாக இருந்திருப்பதாகத் தோன்றுகிறது. தொடர்ச்சியான பயணங்களும், வேலைகளும், உடல்நலக் குறைபாடுகளும், அதோடு, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் அவர் பார்த்த விஷயங்களும் காந்தியைப் பாதித்திருக்கக்கூடும். இதுபற்றிக் கால்லென்பாகுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ‘என்னைச் சுற்றி எங்கு பார்த்தாலும் போலித்தனம், பாசாங்குத்தனம், சீரழிவு’ என்கிறார் அவர்.
Add Comment