100. காந்தி தேசம் பிறந்தது
1916 ஃபிப்ரவரி 6 அன்று பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் காந்தி நிகழ்த்திய உரை பல்வேறு தலைப்புகளைத் தொட்டுச்சென்றது. அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துப் பார்ப்போம்:
1. மாணவர்களாகிய நீங்கள் பேச்சைமட்டும் நம்பாதீர்கள். அதன்மூலம் எல்லா அறிவையும் பெற்றுவிட இயலும் என்று நினைத்துவிடாதீர்கள். குறிப்பாக, இந்தியாவின் தனிச்சிறப்பான ஆன்மிக வாழ்க்கையை நீங்கள் பேச்சின்மூலம் அறியவோ, உணரவோ இயலாது.
2. நாம் நம்முடைய கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளித்துக்கொண்டால் போதாது. நல்ல பேச்சு நம் இதயத்தைத் தொடவேண்டும். அதன்மூலம் நம் கைகளும், கால்களும் அசையவேண்டும் (அது நம்மைச் செயல்படத் தூண்டவேண்டும்).
3. (இப்போது ஆங்கிலவழிக் கல்வியைமட்டும் வழங்குகிற) இந்தப் பல்கலைக்கழகம் தன்னிடம் வரும் மாணவர்கள் அவரவர் உள்ளூர் மொழியில் கல்வி கற்பதற்கும் வழிசெய்யும் என்று நம்புகிறேன். ஏனெனில், நம் மொழி என்பது நம்முடைய பிரதிபலிப்பு. இந்திய மொழிகளால் உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்த இயலாது என்று யாராவது சொன்னால் நான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆங்கிலக் கல்வி என்பது நம் நாட்டுக்கு ஒரு பின்னடைவாகத்தான் அமைந்திருக்கிறது. தாய்மொழியில் கற்கும்போது நாம் இன்னும் விரைவாக முன்னேறலாம்.
4. காங்கிரஸும் முஸ்லீம் லீகும் நம்மை நாமே ஆண்டுகொள்வதைப்பற்றிப் பேசுகின்றன. ஆனால், அவர்களுடைய தீர்மானங்களில் எனக்குப் பெரிய ஆர்வம் இல்லை. இங்கு எனக்கு எதிரில் இருக்கும் இந்த மாணவர்களும் பொதுமக்களும் அதற்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதில்தான் நான் அக்கறை காட்டுகிறேன். ஏனெனில், வெறும் தாள்களோ, உரைகளோ நமக்கு விடுதலையைக் கொடுக்காது. நாம் நம்மை விடுதலைக்குத் தகுதியுள்ளவர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டும்.
Add Comment