பணத்தின் மதிப்பை அறிந்த ஒரே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். இந்தியாவின் பிரதமராக இருந்தோரைப் பட்டியலிட்டால் நேருவுக்குப் பிறகு, நாம் இந்தியராகப் பெருமை கொள்ளத் தக்க பிரதமரும் இவரே.
மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் இராஜ்யசபா உறுப்பினராகப் பதவியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார். ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் என உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர். பொருளாதாரத்துறை பேராசிரியர். வர்த்தக மற்றும் நிதி அமைச்சகங்களின் பொருளாதார ஆலோசகர். நிதி அமைச்சகத்தின் செயலாளர். திட்டக்குழுவின் துணைத்தலைவர். ரிசர்வ் வங்கி ஆளுநர். பிரதமரின் பொருளாதார ஆலோசகர். பல்கலைக் கழக மானியக்குழு தலைவர். இப்படி அவர் பொறுப்பேற்ற அத்தனை பதவிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டார். வர்த்தக மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் பிரிவில் மூன்றாண்டுகள் பணியாற்றினார்.
எண்பதுகளின் இறுதியில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. திருப்பிச் செலுத்த வேண்டிய கடனைக் கட்டமுடியாமல் கிட்டத்தட்ட திவாலாகும் நிலை. கையிலிருந்த தங்கத்தை அடகுவைத்து தேசத்தை மீட்டுவிட முயற்சி செய்தனர். ஆனால் அதற்குப் பலனில்லை. ராஜிவ்காந்தியின் படுகொலைக்குப் பிறகு நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தார். அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இணைந்தார் மன்மோகன் சிங். பொருளாதாரம் தெரிந்த ஒருவரை நிதியமைச்சராக்கும் அளவுக்கு அன்றைய அரசியல் நாகரிகமாக இருந்தது. அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள்தான் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றின.
Add Comment