ஆண்டிறுதி என்றாலே சில அசம்பாவிதங்கள் நிகழ்வது வழக்கமாகிப் பல வருடங்களாகிவிட்டன. இம்முறை உத்தர்கண்ட் சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் நல்லபடியாக மீட்கப்படுவார்களா என்று கவலைப்படத் தொடங்கி, சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் வரை ஒரு பெரும் ஆட்டம் ஆடித் தீர்த்துவிட்டது. சரி, இனி சற்று மூச்சு விட்டுக் கொள்ளலாம் என்று எண்ணும்போதே மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது.
நாடு முழுவதுமாக இதுவரை நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நான்கு பேர் தானே என்று ஆறுதல் கொள்ள வாய்ப்பில்லை. எக்கணமும் இந்த எண்ணிக்கை பல்கிப் பெருகத் தொடங்கிவிடும். ஏனெனில், அண்டை மாநிலமான கேரளத்தில் இது மிகத் தீவிரமாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது.
ஜேஎன் 1 வகை வைரஸ் என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள். ஒமைக்ரானின் உட்பிரிவான பைரோலா வைரஸிலிருந்து உருமாற்றம் கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பெயரில் என்ன இருக்கிறது? ஒரு கிருமி மனித குலத்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கும் என்பதை நாம் நன்றாக அறிவோம். முந்தைய தொற்றுக்காலச் சரிவுகளில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு இப்போதுதான் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறோம். இப்போது மீண்டும் அதே தொற்று. அதே அபாயம்.
Add Comment