நமீபியாவின் முதல் பெண் அதிபராகப் பதவியேற்றிருக்கிறார் நெடும்போ நந்தி தைத்வா.
கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஐம்பத்தேழு சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றிருக்கிறார் நெடும்போ. எதிர்த்துப் போட்டியிட்ட பண்டுலேனி இடுலாவால் இருபத்தாறு சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு நாடு நமீபியா. பெரிய பரப்பளவு இருந்தாலும், மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையை மட்டுமே கொண்டிருக்கிறது. மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே வறுமை, பஞ்சம், பாலின பேதம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகள் இங்கும் இருக்கின்றன.
ஆப்பிரிக்கக் கண்டத்தில், ஒரு கட்சியின் சார்பில் வேட்பாளராக நின்று தேர்தலில் வென்ற இரண்டாவது பெண் நெடும்போ. முதலாமவர் லிபெரியாவைச் சேர்ந்த எலன் ஜான்சன் சர்லீப். இவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2016 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். தற்போது ஆப்பிரிக்காவில் அதிபர் பதவியிலிருக்கும் ஒரே பெண் சமியா சுலுஹு ஹசன். தான்சானியாவின் அதிபராக இருந்தவர் இறந்துவிடவே துணையதிபராக இருந்த சமியா, 2021 ஆம் ஆண்டில் அந்தப் பதவியை அடைந்தார்.
நமீபியாவின் வடக்குப் பகுதியிலிருக்கும் ஓனமுட்டை கிராமத்தில் 1952இல் பிறந்தவர் நந்தி நெடும்போ. தந்தை, கிறிஸ்தவத் திருச்சபையில் பாதிரியார். பெற்றோருக்கு மொத்தம் பதின்மூன்று பிள்ளைகள். அதில் ஒன்பதாவது பிள்ளை நெடும்போ.
Add Comment