மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதம் மெட்ராஸ் பேப்பரில் நாம் இது குறித்து எழுதியபோது குற்றச்சாட்டுகள் மட்டுமே வந்திருந்தன. இப்போது ப்ரிஜ் பூஷன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவர்கள் புகார் சொல்லும் பிஜேபி எம்பியும் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருமான பிர்ஜ் பூஷன் மீது பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு, மும்பை ஓட்டல் தாக்குதலில் தாவூத் இப்ராஹிமுக்கு உதவி செய்த வழக்கு போன்றவை உள்ளன. கொலை செய்தேன் எனச் சொல்லும் வீடியோ வாக்குமூலம் தவிர நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகள் அவர்மீது உண்டு. வலுவான குற்றப் பின்னணி உடையவர் பிரிஜ் பூஷன். பத்து வருடங்களாக ப்ரிஜ் பூஷனால் அவதிப்படுகிறார்கள் வீரர்கள். அவர் பொது இடத்தில் வைத்து வீரர்களைத் தாக்கும் வீடியோக்கள் இருக்கின்றன. “எப்ஐஆர் போட்டுவிட்டோம், விசாரணைக் கமிஷன் அமைத்துவிட்டோம். காவல் துறையை நம்பி விசாரணை முடியும் வரை காத்திருங்கள்” என்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்.
ஜனவரியில் போராட்டம் ஆரம்பித்து மீடியாக்களின், மக்களின் கவனத்தை ஈர்த்த பிறகே கோர்ட் தலையிட்டு ஃஎப்ஐஆர் பதிவானது. அதில் ஒன்று போக்ஸோ சட்டத்தின் கீழ். அதன் பிறகும் கூட பதவியை ராஜினாமா செய்யவில்லை ப்ரிஜ் பூஷன். ஃஎப்ஐஆருக்குப் பின்னும் பல மாதங்களாக விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போனதால்தான் ஊர்வலம் போக முயன்றார்கள். விசாரணையும், கைது நடவடிக்கையும் போராடினால் மட்டுமே சாத்தியம் என்பதாலேயே வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். வெளிப்படையாகப் போராடும் முன், வினேஷ் போகத் பதக்கம் வென்ற பிறகு நடந்த சந்திப்பில் பிரதமரிடமும் அனுராக் தாக்கூரிடமும் நேரிடையாகப் புகார் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை. தங்களைப் பார்த்து ஆவல் கொண்டு மல்யுத்த விளையாட்டில் களமிறங்கியிருக்கும் இளையோரின் நலன் கருதியே சீனியர்கள் இப்போது போராட்டக் களத்தில் இருக்கிறார்கள்.
superb one