வேங்கடேசன் என்றால் உடன் நினைவுக்கு வருவது திருப்பதி. நின்ற கோலத்தில் கோடிக்கணக்கான பக்தர்களின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து அருளக்கூடிய ஒரு ஆகர்ஷண சக்தி பாலாஜி. அந்த வேங்கடவனை அமர்ந்த கோலத்தில் பார்க்க விரும்பினால் செல்ல வேண்டிய ஸ்தலம்தான் நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலின் வயது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் நெமிலி. நெல்மலை என்பது நெமிலி ஆனதற்கு ஒரு கதை இந்த ஊரில் சொல்கிறார்கள். விவசாயம் பொய்த்துப் போன நிலையில் அந்த ஊர் விவசாயிகள் தங்களைக் காக்க வேண்டினர். விளைச்சலில் ஒரு பகுதியைப் பெருமாளுக்கு படைப்பதாக வேண்டிக் கொண்டனர். விளைச்சல் கண்டதும் அவர்கள் அதை மறக்க அந்த நெல் மலையைக் கல் மலையாக மாற்றி விட்டாராம் பெருமாள். தவறை உணர்ந்த அவர்கள் திருந்தி வேண்டத் தனது பங்காக ஒரே ஒரு நெல் மணியை மட்டும் எடுத்துக் கொண்டு ஆசீர்வதித்தாராம். இத்திருத்தலத்தின் மூலவர் வலது கையில் அபயமுத்திரையுடன் இடது கரத்தில் ஒரு நெல் மணியுடன் காட்சி அளிக்கிறார்.
இந்தக் கோயிலின் ஒருபுறம் அமைந்துள்ள ஏரி பல ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையில் நிரம்பி உடைந்து வெள்ள அபாயம் ஏற்பட்டது. ஊர் மக்கள் கோயிலில் தஞ்சம் புகுந்தனர். அப்போது மூலவரின் வஸ்திரங்களிலிருந்து தண்ணீர் சொட்ட ஆரம்பிக்க ஏரியில் வெள்ளம் வடியத் துவங்கியதாம். ஏரியையும் ஊரையும் காப்பாற்றிய பெருமாளை ஏரி காத்த வைகுண்டப் பெருமாள் என்றும் இந்த ஊர் மக்கள் அழைக்கின்றனர்.
Add Comment