Home » வாசக நண்பர்களுக்கு வணக்கம்.
ஆசிரியரிடமிருந்து

வாசக நண்பர்களுக்கு வணக்கம்.

இன்று வெளியாகியுள்ள மெட்ராஸ் பேப்பர், நான்காம் ஆண்டின் முதல் இதழ். மினிமலிசச் சிறப்பிதழாக இது வெளியாகியிருக்கிறது. மினிமலிசம் என்பது மேலைச் சரக்கல்ல. இங்கேயும் எங்கேயும் எப்போதும் உள்ளதுதான். இந்த இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள் எளிமையாகவும் நேர்த்தியாகவும் வாழும் கலையை ஆகக் கூடியவரை அதே எளிமையுடன் விவரிக்கின்றன.

நான்கு புதிய தொடர்கள் ஆரம்பமாகியிருக்கின்றன. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அதிரடியான வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் ‘பனிப்புயல்’ (வினுலா எழுதுகிறார்), ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக்கதையைச் சொல்லும் ‘அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள்’ (கே.எஸ். குப்புசாமி எழுதுகிறார்), Gen – Z என்று அழைக்கப்படும் இன்றைய தலைமுறையினரின் மனத்தைப் படித்து விவரிக்கிற (குறிப்பாகப் பெற்றோருக்கு உதவிகரமான) தொடரினை காயத்ரி ஒய் எழுதுகிறார். இறுதியாக, நீலகிரி மலையின் வரலாறு. ஒரு மலை எப்படி நகரமாக உருக்கொண்டது என்பதன் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதார-நிலவியல் காரணங்களை ஆதாரபூர்வமாக இந்தத் தொடர் (நீலமலை ரகசியம்) உங்களுக்கு விளக்கிச் சொல்லும். சிவராமன் கணேசன் இதனை எழுதுகிறார்.

இரண்டு சிறுகதைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளன. பா. ரேவதியின் ‘ஒலி’ மற்றும் சூ. ஜோசப் அருமை ராஜின் ‘கேட்காதவை’. மெட்ராஸ் பேப்பர் அறிமுகப்படுத்தும் இன்னும் இரண்டு புதிய எழுத்தாளர்கள் இவர்கள். எதிர்காலத்தில் மேலும் சிறந்த படைப்புகளைத் தரக்கூடியவர்கள் என்னும் நம்பிக்கையை உருவாக்கும் கதைகளாக இவை அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

மேலே சொன்னவை தவிர, இன்று முதல் பத்மா அர்விந்தின் ‘அதிகார நந்தி’ தினசரித் தொடரும் ஆரம்பமாகிறது. இது நாள்தோறும் காலை பத்து மணிக்குப் பிரசுரமாகும். பலூசிஸ்தான் வெளியாகும் அதே நேரம்தான். இருபத்தோறாம் நூற்றாண்டின் இம்முதல் இருபத்தைந்து ஆண்டுக் கால அமெரிக்க வரலாற்றினைப் பேசும் இத்தொடர், ஒரு வகையில் இதே கால் நூற்றாண்டுக் கால உலக வரலாறும்கூட. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

அர்த்தமுள்ள கட்டுரைகளை, ஆழம் மிக்க கதைகளை அல்லாமல் வேறெந்த ஜாலங்களுக்கும் ஜோடனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்காத பத்திரிகையாக மெட்ராஸ் பேப்பர் என்றும் இருக்கும். ஆண்டுச் சந்தா 500 ரூபாய் மட்டுமே என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லிப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

அடுத்த வாரம் வேறு பல சுவாரசியமான கட்டுரைகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

பா. ராகவன்
editor@madraspaper.com

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!