மெட்ராஸ் பேப்பருக்கு இது மூன்றாம் ஆண்டு நிறைவிதழ். தமிழ்ச் சூழலில் இன்றெல்லாம் மூன்று ஆண்டுகள் ஓர் இணையப் பத்திரிகையை இடைவெளியின்றி நடத்துவது என்பது கிட்டத்தட்ட மாய யதார்த்தம். அதுவும் வார இதழ். மெட்ராஸ் பேப்பருக்கு அது சாத்தியமானதற்கு வாசகராகிய நீங்கள் மட்டுமே காரணம். இந்தப் பத்திரிகையின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையே அனைத்துக்கும் அடிப்படை. நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நேரத்தில்தான் வாரம் ஒருமுறை உங்களுடன் நேரடியாகப் பேச இந்த ‘நியூஸ் லெட்டர்’ வசதியைப் பயன்படுத்தலாம் என்று தோன்றியது. கூடவே இதழ் வெளியாகும்போது அந்த விவரங்களுடன் வாரம் ஒரு முழுக் கட்டுரையை சந்தாதாரர் அல்லாதோருக்கும் தரலாம் என்று நினைத்தேன்.
நீங்கள் அறியாததல்ல. மற்ற பத்திரிகைகளைப் போல வாழ்வற்ற பரபரப்புச் செய்திகளையும் சினிமா ஜிகினாவையும் கேளிக்கைக்குரிய வேறு எந்தக் குளிகையையும் மெட்ராஸ் பேப்பர் முகர்ந்துகூடப் பார்ப்பதில்லை. எழுதப்படும் விஷயங்களுக்கு அப்பால் வேறு எதுவும் முக்கியமல்ல என்று திடமாக நம்புவதால்தான் படங்களைக்கூடக் கறுப்பு வெள்ளையில் மட்டுமே வெளியிடுகிறேன். வலுவான, கூர்மையான, நடுநிலை தவறாத, அர்த்தமுள்ள இதழியல் என்று ஒன்று உள்ளது. என் ஆசிரியப் பெருமக்கள் அதைத்தான் எனக்குக் கற்பித்தார்கள். என் மாணவர்களுக்கும் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களுக்கும் அதைத்தான் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்த ரகப் பத்திரிகைக்கு மிகவும் வரையறுக்கப்பட்ட வாசகர் எண்ணிக்கைதான் அமையும் என்பதை அறிவேன். ஆயினும் நல்லன விரும்பும் மக்கள் இல்லாமலே போய்விட மாட்டார்கள் என்ற நம்பிக்கையே என்னை இயக்குகிறது.
நிற்க. அந்த 400 ரூபாய் சந்தா ரின்யுவல் பஞ்சாயத்தைப் பேசிவிடுவோம்.
இது ரேசர் பே என்னும் நமது Payment Gateway, சந்தாதாரர்களை நிர்வகிக்கும் ARMember என்னும் ப்ளகின், மெட்ராஸ் பேப்பர் இணையத்தளம் என்னும் மும்முனைகளைக் கொண்ட மூவாண்டுச் சிக்கல். என் தரப்பில் பிழையில்லை என்று பேமெண்ட் கேட்வே சொல்கிறது. என் தரப்பில் பிழையில்லை என்று ப்ளகின் கம்பெனி சொல்கிறது. சரி, என் தரப்பில்தான் ஏதாவது சொதப்பி வைத்திருப்பேன் என்று நானும் தலைகீழாக நின்று தண்ணி குடித்துப் பார்த்துவிட்டேன். ம்ஹும். எங்கே பிழை என்று இந்த விநாடி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இயற்கை மனிதனைப் படைத்தது. மனிதன் நுட்பத்தைக் கண்டறிந்தான். நுட்பம் என்னைப் போட்டு வறுத்தெடுக்கிறது. வேறு வழியில்லை. கொரோனாவுடன் வாழப் பழகியது போல இந்த நாநூறு ரூபாய்ப் பஞ்சாயத்துடன் வாழப் பழக வேண்டும் போலிருக்கிறது.
மெட்ராஸ் பேப்பர் தொடங்கியபோது அறிமுகச் சலுகை விலையாக இருந்தது ரூ. 400. அப்போதே அத்தொகை ரூ. 500 ஆகிவிடும் என்றும் சொல்லியிருந்தேன். சொன்னதைத்தான் செய்தேன். சொதப்பியது எதுவென்றுதான் தெரியவில்லை.
400 ரூபாய் செலுத்தி சந்தாதாரர் ஆனவர்களுள் சிலருக்கு மட்டும் இன்னும் அதே 400 ரூபாய் என்று காட்டுகிறது. அவர்கள் அந்தத் தொகைக்கு ரின்யுவல் செய்துவிடுகிறார்கள். பிறகு ரூ. 100ஐத் தனியே ஜிபே மூலம் 8610284208 என்ற எண்ணுக்கு அனுப்பி, விவரத்தை அதே எண்ணுக்கு வாட்சப்பில் தெரிவித்து, சந்தாவைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள்.
விவரம் அறிந்தவர்களுக்கு இது பெரிய பிரச்னை இல்லை. ஆனால் வயதானவர்கள், சிக்கல் விளங்காதவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எங்களால் முடிந்தவரை பொறுமையாக எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கப் பார்க்கிறோம். வேறென்ன செய்வது?
ஒன்று செய்யலாம். நாநூறு ரூபாய் செலுத்தி சந்தாதாரர் ஆகி, இன்றுவரை ஆண்டுதோறும் இந்தச் சிக்கலில் மாட்டுபவர்கள், ஆட்டோ ரென்யூவலை கேன்சல் செய்துவிட்டுப் புதிதாகச் சேர்வது போலச் சேர்ந்துகொள்ளலாம். அல்லது ரின்யுவல் காலம் வரும்போது, வம்பே வேண்டாம் என்று ரேசர் பேவைத் தலை முழுகிவிட்டு நேரடியாக Bukpet எண்ணுக்கு ஜிபே மூலம் பணம் செலுத்திவிடலாம். ரூ. 400 மட்டும் செலுத்தும்போது ரின்யுவல் நடக்காது. ரூ. 500 செலுத்தப்பட்டது தெரிந்தால்தான் ப்ளகின் உள்ளே அனுமதிக்கும்.
இதையெல்லாம் ஒரு நிறுவனம் என்றால் விநாடிப் பொழுதில் சரி செய்துவிடக் கூடும். ஒரு நபர் கமிஷனாகவே இத்தனைக் காலம் வாழ்ந்து முடித்துவிட்டவன் என்ன செய்ய முடியும்? உங்கள் ஒத்துழைப்பைக் கோருவது ஒன்றே எனக்குள்ள வழி.
மெட்ராஸ் பேப்பரை சந்தா செலுத்தி ஆதரியுங்கள். உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள். நல்ல இதழியல் நாட்டுக்கு நல்லது. நாடு இன்று இருக்கும் நிலைமைக்கு மிகவுமே நல்லது.
மீண்டும் நிற்க. அடுத்த இதழ் (ஜூன் 4, 2025) ஆண்டு விழாச் சிறப்பிதழ். கே.எஸ். குப்புசாமி, வினுலா, காயத்ரி ஒய், சிவராமன் கணேசன் எழுதும் சுவாரசியமான புதிய தொடர்கள் அதில் ஆரம்பமாகின்றன. தவிர, நமது அமெரிக்கச் செய்தியாளர் பத்மா அர்விந்த் எழுதும் ‘அதிகார நந்தி’ என்னும் அமெரிக்க வரலாற்றுத் தொடரும் அன்றைய தினமே தினசரித் தொடராகவும் ஆரம்பமாகவிருக்கிறது. ஜார்ஜ் புஷ் காலம் வரை நான் டாலர் தேசத்தில் எழுதியிருக்கிறேன். பத்மா, 2000 ஆவது ஆண்டுக்குப் பிறகு, இன்று வரையிலான கதையைச் சொல்லப் போகிறார்.
சரி. நேரம் இப்போது நள்ளிரவு பன்னிரண்டு பத்து. இப்போதுதான் இன்றைய இதழ்ப் பணிகளைச் செய்து முடித்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இனி, காலை பத்து மணிக்கு வெளியாக வேண்டிய பலூசிஸ்தான் அத்தியாயத்தில் உட்கார வேண்டும். அடுத்த வாரம் மீண்டும் பேசுகிறேன்.
அன்புடன்,
பா. ராகவன்
editor@madraspaper.com











நாடிருக்கும் நிலையில் நம்மை சுற்றி நடப்பவைகளை, உள்ளது உள்ளது போல் அறிந்து , நாமும் நன்றாக, நாடும் நன்றாக இருக்க வேண்டும் என்றால்…நான் அறிந்தவரை இது தவிர , இந்த பத்திரிகை தவிர , இதில் படித்து உணர்வதை விட , வேறு வழி தெரியவில்லை. அதிகமான பத்திரிகைகள் சுதந்திரமாக , உண்மை, நல்லவை , மனித அக்கறை இதை கண்டு கொள்ளாமல், அவர்கள் கருத்தை மக்கள் மீது திணிப்பதையே, வேலையாக கொண்டிருக்கின்றன. இருப்பதில் மிகச்சிறந்த ஒன்றினை, அறிவுள்ள நம் மக்கள் இதை பயன்படுத்தி, நடப்பினை புரிந்தால், நலமாக வாழ இது மெட்றாஸ் பேப்பர் நல்லுதவி செய்யும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இது தினம் வரும் செய்தியே தாமதமாகத்தான் அறிந்தேன். இது என் தவறே! இனிய வாழ்த்துகள். இந்த பத்திரிகை இன்னும் வளமாக, துவங்கிய நாள் முதல் வளமாக்கும், ஆம் நம் எண்ணங்களை, நெஞ்சங்களை வளமாக்கி , ஆரோக்கியமான வாழ்வு தருவதில் முதலாக என்றென்றும் இருக்க வாசகனின் நல் வாழ்த்துகள்.