கடந்த வாரம், புதிய உலக வரைபடத்தை ஏற்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பல மாதக் கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நூற்று அறுபத்து நான்கு உறுப்பு நாடுகள் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே எதிர்த்து வாக்களித்தது. ஆறு நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்தியா, ஜப்பான், உக்ரைன் நாடுகள் வரைபடத்தின் சில பகுதிகளைச் சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்துள்ளன.
தற்போது நாம் பரவலாகப் பயன்படுத்திவரும் உலக வரைபடம், மெர்கேட்டர் வரைபடம் எனப்படுகிறது. இது 1569ஆம் ஆண்டில் ஃபிளான்டர்ஸைச் சேர்ந்த நிலப்படவியலாளர் ஜெரார்டஸ் மெர்கேட்டரால் உருவாக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகள் புதிய பிரதேசங்களைக் கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்த காலகட்டம் அது.
இவ்வரைபடம், முப்பரிமாணப் புவியை இருபரிமாணத்தில் காட்ட முயல்கிறது. பரப்பளவு, வடிவம், தூரம் அல்லது திசையைச் சிதைக்காமல் இதனைச் செய்ய முடியாது. திசைகாட்டியை நம்பி மேற்கொள்ளப்படும் கடல் பயணங்களுக்கு வரைபடத்திலுள்ள நிலப்பகுதிகளின் கோணமும், அவை இருக்கும் திசையும் தூரமும் துல்லியமாக இருக்கவேண்டியது அவசியம். எனவே, மெர்கேட்டர் பரப்பளவில் சமரசம் செய்தார்.
















Add Comment