கடந்த வாரம் முழுதும் சமூக ஊடகங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை வெளியிட்டுக்கொண்டே இருந்தார்கள். அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் இல்லாத பெற்றோர், தமது பள்ளிக்கால மதிப்பெண் தாளைத் தேடியெடுத்துப் பிரசுரித்து மகிழ்ந்தார்கள். இதில் நமது கவனத்தைக் கவர்ந்த அம்சம், மேற்படி பெற்றோரின் பிள்ளைகள் யாருமே அரசுப் பள்ளியில் படித்துத் தேறியவர்கள் அல்லர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சியடையாமல் இல்லை, எங்கோ ஓரிருவர் சாதிக்காமலும் இல்லை. ஆனால் இப்படிக் கொண்டாடிக் களிக்கும் அளவுக்கு அவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்களா அல்லது அதிக மதிப்பெண் பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிக அளவு இருக்கிறதா என்றால் கிடையாது.
உடனே நாம் எப்படி நம்மை ஏமாற்றிக்கொள்வோம்? ஒரு மாணவரின் தரம் மதிப்பெண்களில் இல்லை என்று சொல்லிவிடுவோம்.
ஆனால் நவீன உலகம் சான்றிதழ்களையும் எண்களையும்தான் நம்புகிறது, ஏற்கிறது. இது புரிந்த அத்தனை பேரும் சிபிஎஸ்ஈ கல்வி முறைக்குச் சென்றுவிடுகிறார்கள், தனியார் பள்ளிகளில் தஞ்சமடைந்துவிடுகிறார்கள்.
Add Comment