17. சாலை, கல்வீடு மற்றும் ஊட்டி
அதுவரை கோயம்புத்தூரைத் தலைமையிடமாகவும், திம்மட்டியை வாழிடமாகவும் கொண்டு சல்லிவன் தனது அலுவல்களைப் பார்த்துவந்தார். இப்போதைய கோத்தகிரி வழியாக கோயம்புத்தூரிலிருந்து குதிரை வண்டிகள் வசதியாக வந்து. செல்லுமளவுக்குப் பாதை அமைக்கப்பட்டது. பெர்க்மான்ஸின் சீரியத் திட்டம் இதற்கு உதவியது. முதலில் மனிதர்கள் நடந்து ஏறிச்சென்று வருமளவுக்கு இருந்த ஒற்றையடிப்பாதையின் வரைபடம் வரையப்பட்டுத் திட்டமிடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. யானைகள் சென்ற வழியைக் கவனித்து, அதற்கேற்றவாறு வளைவுச்சாலைகளாக இதனை அமைத்தால் செங்குத்து மலைகளை எளிதில் ஏறலாம் என்று திட்டம் வகுக்கப்பட்டது. இந்தச்சாலையும் இரண்டு ஆட்கள் வசதியாக நடந்து செல்லுமளவுக்கு அல்லது இரண்டு குதிரைகள் சேர்ந்து மலையேறும் அளவுக்குத்தான் முதலில் திட்டமிடப்பட்டன.
சாலை அமைக்கும்போது ஏகப்பட்ட இடையூறுகள் வந்தன. மலைகளைக் குடைய வேண்டியிருந்தது. பாறைகளை வெட்ட வேண்டியிருந்தது. காடுகளைச் சீரமைக்கும் பணியின்போது வனவிலங்குகள் பாய்ந்து வந்து, பலரின் உயிர் போனது. பனியும் மழையும் பணி செய்வதை இடைஞ்சல் செய்துகொண்டே இருந்தன. மழைக்காலம் வந்து மலைச்சரிவுகள் ஏற்பட்டபோது, நிரந்தரமான சாலைகள் அமைப்பது கனவுதான் என்று ஒருகட்டத்தில் இந்தத் திட்டத்தையே நிறுத்தி வைக்குமளவுக்குச் சென்றுவிட்டார்கள். எத்தனை திட்டமிட்டாலும் இந்த மலைச்சரிவு என்னும் கொடூரனை நம்மால் எதிர்த்து நிற்கவே முடியாது என்பதுதான் பொறியாளர்களின் கூற்றாக இருந்தது.














Add Comment