எது தேவையோ அதுவே தர்மம்
லிசா டீமிலிருந்து ஜாப்ஸ் விலக்கப்பட்டார். வேறுவழியில்லாமல் மர்க்குலாவின் இம்முடிவை ஜாப்ஸ் ஏற்கவேண்டியதாயிற்று. ஆனாலும் தனித்துவமான கம்ப்யூட்டர் ஒன்றைச் செய்துவிட வேண்டும் என்னும் அவரது ஆர்வம் தொடர்ந்தது.
சில வாரங்கள் அமைதியாக இருந்தார். ஆப்பிளின் வெவ்வேறு குழுக்களில் என்ன நடக்கிறதென்று உற்றுநோக்கினார். அதன் பலனாக ஒன்று நிகழ்ந்தது. அது ஆப்பிளின் பாதையை மாற்றி அமைக்கவிருக்கும் மகத்தானதொரு திருப்பம்.
ஜெராக்ஸ் ஆய்வகத்தை ஆப்பிள் குழுவினர் பார்வையிடக் காரணமாக இருந்தவர் ஜெஃப் ரஸ்கின். இவர் ஒரு சுவாரசியமான மனிதர். தொழில்நுட்ப அறிவும் தத்துவ ஞானமும் சரிநிகர் சமானமாகக் கலந்து செய்த கலவை.
அறுபதுகளிலேயே முனைவர் பட்டம் பெற்றவர். கணினிகளில் கிராஃபிக்கல் யூஸர் இன்டர்ஃபேஸ் என்னவெல்லாம் செய்யக்கூடும் என்று ஆய்வு செய்தவர். வெறுமனே டெக்ஸ்ட் கமாண்ட்களை மட்டுமே ஏற்றுச் செயல்படும் கணினிகள் தேறாது என்பது இவரது முடிவு.















Add Comment