அவலாஞ்சி, எமரால்டு மற்றும் குந்தா
பைகாரா நீர்மின் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. அதிலிருந்து தயாராகும் மின்சாரத்தை வெற்றிகரமாக மாகாணத்தில் சில பகுதிகளுக்கு வழங்கும் நுட்பமும் நவீனப்படுத்தப்பட்டுவிட்டது. இதன் பயன்பாடு உறுதிசெய்யப்பட்ட பிறகு, நீலகிரியின் பிற பகுதிகளில் உள்ள வேகமாகப் பாயும் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இதன்வழி, மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் நீர் மின் நிலையங்கள் அமைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. அதுவரை மத்திய நீலகிரியிலும் கிழக்கு நீலகிரியிலும் மட்டுமே இந்த ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தன. மேற்குப் பக்கமாக அவர்கள் இந்த ஆய்வை நீட்டித்தபோதுதான் அவர்களுக்கு அங்கே அளப்பரிய புதையல் காத்திருந்தது தெரிந்தது.
1823ஆம் ஆண்டில் சர்வே செய்வதற்காக வந்த பிரிட்டிஷ் பொறியாளர்கள் பெரும் நிலச்சரிவால் அங்கு மலை சரிந்து வீழ்ந்திருந்ததைக் கண்டனர். இங்கிலாந்தின் பனிச்சரிவுகளைப் பார்த்திருந்த கண்களுக்கு அதுவும் ஒரு பனிச்சரிவுக் காட்சியாகவே தெரிந்தது. நீலகிரியின் பிற பகுதிகளைப் போல இங்கே அப்போது குடியிருப்புகளோ பழங்குடியினரோ வசித்திருக்கவில்லை. ஆகவே அந்த இடத்திற்குப் பெயரும் தெரியவில்லை.














Add Comment