114 பிரிவும் சந்திப்பும்
ஶ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை கட்டுரையைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கியதில் நிமாவைப் பற்றிய நினைவே எழவில்லை. தனக்காக அவள் என்னவும் செய்வாள் என்கிற நம்பிக்கையில் இருந்தவனுக்கு, புத்தகத்துக்கு இல்லை என்று அவள் மறுத்தது சுருக்கென்று தைத்தது. எடுத்திருப்பது எவ்வளவு முக்கியமான காரியம் என்கிற உத்வேகத்தில் அவளை மறந்தே போனான்.
எப்போதும் முதன்மையாய் இலக்கியம். அதற்குப் பிறகுதான் எல்லாமே என்று தான் இருப்பதை, ‘நீ என்னப்பா 23 வயசுல புக்கே போட்டுட்டே. நான்லாம் உன் வயசுல, கோவில்பட்டிப் பிள்ளைங்க பின்னாடித் திரிஞ்சிக்கிட்டு இருந்தேன். உன்னைய மாதிரியே நானும் சைக்கிள்தான். உன் சைக்கிள் இலக்கியவாதிகள் எழுத்தாளர்களையா தேடிப் போறா மாதிரி, என் சைக்கிள் பிள்ளைங்க பின்னாலையே போய்க்கிட்டு இருந்துது. ஆளைப் பாத்ததும் சோறு தண்ணி எல்லாம் மறந்துடும். எப்பப் போனாலும் வீட்ல வேற என்ன இருக்கோ இல்லையோ சோத்துக்குப் பஞ்சமிருக்காது. அதனாலதான் எந்தக் கவலையும் இல்லாம பிள்ளைங்க பின்னாடி சுத்தவும் முடிஞ்சுதுன்னு வெச்சுக்க’ என வெள்ளைத்துரை என்கிற வித்யாஷங்கர் அப்பட்டமாகச் சொன்னபோதுதான், 24 மணிநேரமும் மண்டையின் ஒரு பகுதியில் பெண்களே இருந்துகொண்டிருப்பதாக எண்ணிக் குதூகலத்துடனும் குற்றவுணர்வுடனும் ஒருசேர இருந்துகொண்டிருக்கிற தான், உண்மையில் அப்படி இல்லைதானோ என்று தோன்றிற்று.
Add Comment