137. கனிந்த காதல்
சோனியா காந்தியின் இயற்பெயர் எட்விக் ஆன்டோனியா அல்பினா மைனோ. 1946 டிசம்பர் 9ஆம் தேதி இத்தாலியில் சுமார் 3000 பேர் வசிக்கும் விகென்சா என்ற ஒரு சின்ன ஊரில் பிறந்தார். இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினியின் பரம விசிறியான ஸ்டெஃப்னோ மைனோ – பாவ்லா மைனோ தம்பதியரின் மகள்.
இரண்டாம் உலகப் போரில் இத்தாலியப் படையில் இருந்த ஸ்டெஃப்னோ மைனோ ரஷ்யாவை ஜெர்மனி தாக்கியபோது, போர்க் கைதியாகப் பிடிபட்டார். அப்போது தான் தப்பிக்க உதவிய மூன்று ரஷ்யப் பெண்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது மூன்று மகள்களுக்கும் அந்தப் பெண்களின் பெயரைச் சூட்டினார்.
அதன்படி அலெக்சாண்டரா என்ற மூத்த மகள் அனுஷ்கா ஆனார். இளையமகள் அல்பினா பின்னாளில் சோனியா காந்தி ஆனார். கடைசி மகள் பெயர் நடியா. உள்ளூர் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அப்பா தன் மகள்களை உயர்நிலைப் பள்ளிக்கு பக்கத்து டவுன் ஹாஸ்டலில் சேர்த்தார்.
ஸ்டெஃப்னோ ஒரு கட்டிட மேஸ்திரி. உலகப் போர் முடிந்த கையோடு, கட்டுமானத் தொழில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஸ்டெஃப்னோ சொந்தமாக ஒரு கட்டுமானக் கம்பெனியைத் தொடங்கினார். கடுமையான உழைப்பில் சொந்தவீடு, கொஞ்சம் வசதியான வாழ்க்கை என்று முன்னேறினார். ஆனாலும், குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என்ற மிடில் கிளாஸ் மனப்பான்மை அவருக்கு அழுத்தமாக இருந்தது.
Add Comment