175. விபரீத நாற்காலியின் கதை
இளைஞர் காங்கிரஸ் பேட்ஜ் அணிந்தவர்கள் கடை கடையாய் போய், ‘இளைஞர் காங்கிரஸ் சார்பில் வயதுவந்தோர் கல்வி மையம், இலவசச் சட்ட உதவி மையம் நடத்துகிறோம். அதற்கு நன்கொடை கொடுங்கள்’ என்பார்கள். வரதட்சிணை ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு நன்கொடை கேட்பார்கள். நன்கொடை கொடுத்துவிட்டால் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். கொடுக்காமல் ஏதாவது சாக்கு சொன்னால், ‘கொடுத்தே ஆக வேண்டும்!’ என்று தகராறு செய்வார்கள்.
மிகவும் முரண்டு பிடித்தால், ‘ இருபது அம்சத் திட்டத்தின்படி உங்கள் விற்பனை விலையில் தள்ளுபடி கொடுக்க வேண்டுமே! அதை போர்டு எழுதி வைக்க வேண்டுமே? எங்கே போர்டு?’ என்றோ, ‘கடையில் ஸ்டாக் இருப்பு விபரம் போர்டில் எழுதிவைக்கவில்லையே?’ என்றோ கேட்பார்கள். அடுத்து ‘தொழிலாளர் நல அதிகாரியிடம் புகார் கொடுப்போம்; மீதியை அவர் பார்த்துக் கொள்ளுவார்!’ என்று மிரட்டுவார்கள். வேறு வழியின்றிக் கடைக்காரர்கள் மனசுக்குள்ளே திட்டிக் கொண்டே பணத்தைக் கொடுத்து அனுப்புவார்கள்.
நாடெங்கும் இது மாதிரியான இளைஞர் காங்கிரஸ் ரவுடிகளின் அட்டகாசம் அரங்கேறியது என்றாலும், டெல்லியில் இது உச்சத்தில் இருந்தது. அதனாலேயே, வெறுத்துப் போன டெல்லி வியாபாரிகள் சங்கத்தினர், பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஜனதா கட்சிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தார்கள். காங்கிரஸ் கட்சி படுதோல்வி கண்டதை இனிப்பு வினியோகித்துக் கொண்டாடினார்கள். நாட்டின் பல பகுதிகளுக்கும் சஞ்சய் காந்தி பயணம் செய்து பல்வேறு விழாக்களில் கலந்துகொள்வது, அரசின் திட்டங்களைத் தொடங்கிவைப்பது என்று பரபரப்பானார்.














Add Comment