10. அடிமைப்படுத்த முடியாதவர்கள்
என்னிடமிருந்து தான் ஞானத்தின் புதிய சகாப்தம் தொடங்குகிறது – ஓஷோ
குருவுக்கும் சீடருக்குமான உறவு நிலைகளைச் சில குட்டிக் கதைகள் வாயிலாகப் பார்த்தோம். ஆன்மிகத்தின் பாதையில் குருவுக்கு நிகராகச் சீடன் இருக்க வேண்டும். குரு ஞானத்தால் அந்த ஒளியைப் பெற்றிருப்பார். ஆனால் சீடன் தன்னுடைய அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் வெகுளித்தனத்தால்தான் குருவை அணுக முடியும்.
இதைக் குறித்து ஓஷோ பல முறை பேசியிருக்கிறார். முதலில் ஞானத் தெளிவு பெற்ற மனிதர் எந்த மதத்தையும் சார்ந்தவராக இருக்க மாட்டார். அவர் இருத்தலைச் சார்ந்தவர் என்பார் ஓஷோ.
“எண்பது சதவீத மனிதர்கள் கிறித்துவர்களாகவோ முகமதியர்களாகவோ இந்துக்களாகவோ பௌத்தர்களாகவோ இருக்கிறார்கள். இதில் அடிப்படையிலேயே ஒரு கோளாறு இருப்பதாகப் படுகிறது. ஞானத்தெளிவு பெற்ற ஒருவன் எப்படி முஸ்லீமாக இருக்க முடியும்? எப்படிக் கிறித்துவனாக இருக்க முடியும்? எப்படி இந்துவாக இருக்க முடியும்? மதத்தை மறுதலிப்பவன் அல்லவா ஞானி! நான் மந்தையில் ஓர் ஆடு அல்ல, எனக்கு எந்தவித மேய்ப்பவனும் தேவையில்லை என்று அவன் கூற வேண்டும். என் சொந்த விழிப்புணர்வைச் சேர்ந்தவன் நான். எனக்கான சுயமான ஒளி என்னிடத்திலேயே இருக்கிறது. பைபிள் வந்து எனக்கு வழிகாட்ட வேண்டிய அவசியமில்லை. வேதங்கள் வந்து எனக்கான பார்வையை வழங்க வேண்டியதில்லை. எனக்கான பார்வை எனக்குள்ளது என்று ஞானத் தெளிவு பெற்றவன் கூற வேண்டும்” என்கிறார் ஓஷோ.
Add Comment