48. பங்காளி ஆகலாம்
உங்கள் தெரு முனையில் ஒரு சிறிய இட்லிக் கடை இருக்கிறது. நீங்கள் அவ்வப்போது அங்கு சாப்பிடுவதுண்டு. இட்லி, மூன்று வகைச் சட்னி, சாம்பார் என்று அனைத்தையும் சுவையாகவும் தரமாகவும் மலிவாகவும் தருகிற அந்தக் கடைக்காரரைப் பாராட்டுவதும் உண்டு.
ஒருநாள், இட்லியைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி நீங்கள் அவருக்கு ஒரு யோசனை சொல்கிறீர்கள், ‘இவ்வளவு நல்லாச் சமைக்கறீங்க. ஆனா, இப்படிச் சின்ன கடையில முடங்கிக் கிடக்கலாமா? நல்ல, பெரிய கடையா ஒண்ணை வாடகைக்கு எடுத்து, நாற்காலி, மேசையெல்லாம் போட்டு, ஏழெட்டு ஆளுங்களை வேலைக்கு வெச்சு, ஸ்விக்கி, ஜொமாட்டோ-வுல டெலிவரியெல்லாம் கொடுத்து முன்னேறவேண்டியதுதானே?’
‘அதுக்கெல்லாம் நிறையப் பணம் வேணும் சார்’ என்று சிரிக்கிறார் கடைக்காரர், ‘எனக்கு வாய்ச்சது இதுதான்.’
அப்போது உங்களிடம் ஒரு கணிசமான தொகை இருக்கிறது, இந்தக் கடைக்காரரின் கைமணத்தை நம்பி அதை முதலீடு செய்யலாமா என்று யோசிக்கிறீர்கள்.
Add Comment