‘உன் நண்பனைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன்’ என்பது டிஜிட்டல் உலகிலும் செல்லுமா என்பது தெரியவில்லை. ‘நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டிலைக் காட்டு. எந்த நாட்டில் இது தயாரிக்கப்பட்டதென்று சொல்கிறேன்.’ என்று சவால் விடத் தயாராக இருக்கின்றனர் கடல் உயிரியலாளர்கள். இங்கிலிஷ் கால்வாயில் அமைந்துள்ள குரன்சி கடற்கரையில் ஆய்வு நடத்தும் இவர்கள், அறுபத்து ஒன்பது நாடுகளில் தயாரிக்கப்பட்ட நெகிழி பாட்டில்களைச் சேகரித்துள்ளனர். மொத்தம் முந்நூற்று முப்பது பிராண்டுகளைச் சேர்ந்தவை. இந்தக் கால்வாயிலிருக்கும் மீன் வகைகளைவிட இந்த பாட்டில் வகைகள் அதிகம் என்கின்றனர்.
எப்படி இத்தனை நாடுகளின் பாட்டில்கள் இங்கு சேர்ந்தன? அதற்கு குரன்சி தீவுகளின் நீர்வழிப் போக்குவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். தெற்கு இங்கிலாந்தை பிரான்ஸின் வடக்கிலிருந்து பிரிக்கும் அட்லாண்டிக் கடலின் குறுகிய பகுதிதான் இங்கிலிஷ் கால்வாய். உலகின் பரபரப்பான கடல் போக்குவரத்து நடக்கும் வட கடலின் தெற்கு முனையோடு டோவர் ஜலசந்தி மூலம் இந்தக் கால்வாய் இணைகிறது. இதனால்தான் வருடத்துக்குப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் குரன்சி தீவின் செயின்ட் பீட்டர் துறைமுகத்தைக் கடக்கின்றன. வரலாற்றின் பல போர்களிலும் இங்கிலாந்துக்கு அரணாக நின்று காத்த பெருமை இதனையே சேரும். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி கைப்பற்றிய ஒரே இங்கிலாந்து மண் இந்தக் குரன்சி தீவுகள். இதன் மூலம் இங்கிலாந்துக்கு முன்னேறும் ஹிட்லரின் கனவு மட்டும் நிறைவேறவில்லை.
வருத்தம் அளிக்கும் போக்குக்கு முடிவு எப்போது எனும் போது மனது கனக்கிறது.