2022ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி. கத்தார் காவலர்கள் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து எட்டு இந்தியர்களைக் கைது செய்தனர். எதற்காகக் கைது செய்தார்கள் என்ற விளக்கம் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு அப்போதைக்கு இருக்கவில்லை. பின்னாட்களில் யார் கேட்டாலும் தங்கள் நாட்டிற்கெதிராக இஸ்ரேலுக்காக உளவு பார்த்தார்கள் என்கிற ஒற்றைப் பதில் அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.
அவர்கள் அனைவரையும் தனிமைச் சிறையிலடைத்தனர். இந்தக் கைது தொடர்பாக முதலில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு எந்தத் தகவலும் அளிக்கவில்லை. சரியாக ஒரு மாதம் கழித்து செப்டம்பர் 30-ஆம் தேதி குடும்பத்தினருடன் பேச அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறையிலிருந்தவர்களைப் பார்ப்பதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அக்டோபர் 3-ஆம் தேதி அனுமதி கிடைத்தது. நீதிமன்ற விசாரணைகளுக்கான நடைமுறைகளை 2023-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி தொடங்கியது கத்தார் அரசு. அனைவருக்கும் பலமுறை பிணை மறுக்கப்பட்டது. தொடர்ந்து இரகசிய விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விவகாரத்தின் ஆரம்பத்திலிருந்து இந்திய வெளியுறவுத் துறை கவனம் செலுத்த ஆரம்பித்தது. ஆனாலும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள விளக்கமான குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்து இருநாட்டு அரசுகளும் இதுவரை வாய் திறக்கவில்லை.
Add Comment