உடலிலும் மனத்திலும் தாங்கமுடியாத சுமையொன்று ஏறி உட்கார்ந்துகொண்டு பிடிவாதமாக விலக மறுத்த ஒரு நாளில்தான் மகேந்திரன் அந்தச் சாமியாரைச் சந்தித்தான்.
உண்மையில் அதுவொன்றும் வழக்கத்துக்கு மாறான நாளில்லை, வழக்கத்துக்கு மாறான சுமையில்லை, அந்தக் காலகட்டத்தில் அவனுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அப்படித்தான் சென்றுகொண்டிருந்தது.
அப்போது அவன் ஒரு கிறுக்குப் பிடித்த மேலாளரிடம் சிக்கிக்கொண்டிருந்தான். நாள்தோறும் அவர் அவன்மீது ஏற்றிவைக்கிற சுமைகள் பாதி, அந்தச் சுமைகள் வளர்ந்து பிறப்பிக்கிற பிள்ளைச் சுமைகள், பேரச் சுமைகள் மீதி. எல்லாமும் அவனை அழுத்தித் துவைத்துக்கொண்டிருந்தன.
அந்த மேலாளருக்குத் தன்மீது இப்படி ஒரு வெறுப்பு வருவதற்கு என்ன காரணம் என்று மகேந்திரனுக்குத் துளியும் புரியவில்லை. அவன் மக்கு இல்லை, பெரும் திறமைசாலியும் இல்லை, சராசரியான வேலையை நேர்மையாகச் செய்வான், கற்றுக்கொள்வான், ஏமாற்றமாட்டான், இதற்குமேல் ஒருவன் என்ன செய்துவிடமுடியும்?
Add Comment