ராவணனைக் கொன்றாகிவிட்டது. சீதை மீட்கப்பட்டாள். இனி என்ன? ஊர் திரும்ப வேண்டியதுதான். ராமனும் அவனது படையினரும் புறப்பட்டு ராமேஸ்வரம் வந்து இறங்குகிறார்கள். வீசா அவசியமற்ற காலம் என்றாலும் சடங்கு சம்பிரதாயங்கள் நிறைந்த காலம். கொல்லப்பட்ட ராவணன் ஓர் அந்தணன். கொன்றது ராமனே என்றாலும் பிரம்மஹத்தி தோஷம் பிடித்திருக்கும். என்ன செய்யலாம்?
ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தக் கடலில் குளித்து, தோஷத்தைப் போக்கிக்கொண்டான் என்பது புராணம்.
பெயரில் இருக்கும் உக்கிரம், இயல்பில் கிடையாது அங்கே. அலையற்ற, அமைதியான கடல். கரையெல்லாம் மனிதர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை. பரிகார பாக்கி. நீத்தார் கடன். ராமேஸ்வரத்து அந்தணர்கள், தேசம் முழுவதிலும் இருந்து வருகிற பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் நீத்தார் கடன் சடங்குகளைச் செய்து வைக்கிறார்கள்.
கடன் தீர்த்தவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நேரே காசிக்கு யாத்திரை போகிறார்கள். அதுதான் வழக்கம். அக்னி தீர்த்தத்தில் மூழ்கி எழும்போது மணல் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த மணலையும் தீர்த்தத்தையும் எடுத்துச் சென்று காசி விஸ்வநாதரிடம் சேர்ப்பிக்க வேண்டும். மீண்டும் அங்கிருந்து காசி தீர்த்தத்தைக் இங்கே கொண்டு வந்து அபிஷேகம் செய்து தங்கள் புனித யாத்திரையை முடித்துக் கொள்ள வேண்டும். காலம் காலமாக இதுதான்.
Add Comment