6. நாக பந்தம்
சிகரத்தை அடைந்தபோது முதலில் எழுந்த உணர்ச்சி, திகைப்புத்தான். மறுபுறம் என்ற ஒன்று இல்லாத மிகப்பரந்த சமவெளியாக அது இருந்தது. நாங்கள் வசிக்கும் கானகத்தின் அடர்த்தியினும் பல மடங்கு இதன் அடர்த்தி பெரிதாகவும் தோன்றியது. எங்கெங்கும் வானை அளாவிய குங்கிலிய மரங்கள் அரண் போலப் பரவிக் கிடந்தன. ஒளியின் ஒரு சொட்டுக்கூட நிலத்தில் விழுந்துவிடாதவண்ணம் அவற்றின் கிளைகள் அகல விரிந்து ஒன்றோடொன்று பின்னிக் கிடந்தன. குஞ்சரக் கூட்டம் போலத் திரண்டிருந்த தருக்களின் நடுவே நடக்கவும் இயலாதபடி புதர்கள் மண்டிக்கிடந்தன. புதர்களின் மீதெல்லாம் குங்கிலியப் பூக்கள் உதிர வண்ணத்தில் விழுந்து நிறைந்திருந்தன. பகலின் இருட்டுக்குத் துணை வருவது போலச் சில பூச்சிகளின் சத்தம் மட்டும் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. மற்றபடி கண்ணெட்டும் தொலைவில் மரங்களையும் புதர்களையும் தவிர ஒன்றுமே தென்படவில்லை.
அனைத்தினும் வியப்பு, இந்தக் காட்டில் மிருகங்களே இல்லையோ என்று ஐயம் எழுந்தது. பெரிய மிருகங்கள் வசிக்கும் காடுகளுக்கு இயற்கையில் ஒரு தன்மை உண்டு. மனிதர்கள் வசிக்கும் இடங்களை ஒலிகளால் அறிய முடிவது போல மிருக நடமாட்டத்தை நாங்கள் பிரஸ்ரவ நெடியைக் கொண்டு கணிப்போம். ஆனால் அந்தக் காட்டில் அப்படியொன்றின் இருப்பையே என்னால் உணரமுடியவில்லை. இது வினோதமாக இருந்தது. என் நாசி உணர்ந்த மூலிகை நெடிகளையும் இனம் பிரிக்க இயலாதது அதிர்ச்சியாக இருந்தது. மனிதனின் அகந்தையைப் போட்டு நொறுக்குவதில் அரண்யானியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
இன்னொன்றையும் கவனித்தேன். பைசாச மலையின்மீது நான் ஏறி வந்த பொழுது மருந்துக்கும் குங்கிலிய மரங்களைக் காணவில்லை. பலாசத்தைக் கண்டேன். உதும்பரங்களைக் கண்டேன். கர்ணிகாரம் அடிக்கொன்று இருந்தது. இவை எதுவும் அருகருகே தழைப்பவை அல்ல என்பதை நினைவுகூர்ந்தபோதே கன்னுலா சொல்லி அனுப்பியதும் நினைவுக்கு வந்தது.
‘பைசாசக் குன்றில் நீ காண்பனவற்றில் பெரும்பகுதி மாயத் தோற்றமாக இருக்கும். எதிலும் மனத்தைப் பறிகொடுத்துவிடாமல் செயலில் மட்டும் அக்கறை செலுத்து.’
‘மனிதர்களிடத்துமா?’
Add Comment