7. தடாகம்
போர்க்களம் எனக்குத் தெரியும். யுத்தமென்றால் தெரியும். வெற்றியும் தோல்வியும் இரு தரப்புக் களமாடலின் தன்மை அடிப்படையில் ஏதோ ஒரு புள்ளியில் தீர்மானிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒன்பது நாழிகைகளில் முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்ற ஒரு சூரபதியை நான் அதற்குமுன் கண்டதில்லை. அதனினும் என்னை வியக்கச் செய்தது, சொன்னபடி அவர் ஒன்பது நாழிகைகளில் திரும்பி வந்ததுதான்.
‘என்ன ஆயிற்று?’ என்று ஆர்வமுடன் ஓடிச் சென்று கேட்டேன்.
‘நன்றி சகோதரனே. தக்க சமயத்தில் நீ கொண்டுவந்த தகவல் மிகவும் உதவியாக இருந்தது. எதிரிகளைச் சிதறடித்துவிட்டோம்’ என்று சொல்லி என்னைக் கட்டித் தழுவினார்.
‘அவர்கள் ஓடிவிட்டார்களா?’
‘எண்பது பேர் வந்தார்கள். பன்னிருவர் இறந்தார்கள். அறுவர் கைதாகியிருக்கிறார்கள். மற்றவர்கள் ஓடிவிட்டார்கள்.’
‘உங்கள் தரப்பில்?’
‘தேவி ஹிதிம்பாவைத்தான் நாங்கள் களத்தில் சூரபதியாக நிறுத்துவோம். அவள் எப்படித் தனது வீரர்களை இழக்கச் சம்மதிப்பாள்?’ என்று கேட்டபோது பெருமித உணர்ச்சி அவர் முகத்தில் நிறைந்து ததும்பியது.
Add Comment