11. புருஷன்
சர்சுதி ஒரு தெய்யம் என்று என் தகப்பன் சொன்னான். அந்த குருகுலத்துக்கு அருகே ஓடிய நதியின் கரைக்கு நான் சென்றதில்லை. நாம் அங்கே செல்லக்கூடாது என்று தகப்பனும் தாயும் திரும்பத் திரும்பச் சொல்லி வைத்திருந்தார்கள். தொடக்கத்தில் ஏன் கூடாது என்று ஒன்றிரண்டு முறை கேட்டுப் பார்த்தேன். அவர்கள் பதில் சொல்லவில்லை. பிறகொரு நாள் என் தகப்பன் தொழில் முடித்துவிட்டு குடிசைக்கு வரும்போது இடுப்பில் முடிந்து எடுத்து வந்திருந்த விதையொன்றை என் முன்னால் நீட்டினான்.
அது என்னவென்று கேட்டேன்.
‘மகனே, இது என்னவென்று நான் இப்போது சொல்லப் போவதில்லை. நீ இதை ஒரு கல்லின்மீது வைத்து முடிந்தவரை வேகமாகத் தேய்த்துக்கொண்டே இரு. பிறகு சொல்கிறேன்’ என்றான்.
அவன் ஏதோ ஒரு புது விதமான விளையாட்டை எனக்குக் கற்பிக்கிறான் என்று எண்ணி மிகுந்த ஆர்வமுடன் ஓடிச் சென்று ஒரு கல்லைக் கொண்டு வந்து வைத்து அதன்மீது அந்த விதையைத் தேய்க்கத் தொடங்கினேன்.
‘ம்ஹும். போதாது. இன்னும் வேகமாகத் தேய்’ என்று அவன் சொன்னான்.
நான் இன்னும் வேகமாகத் தேய்த்தேன்.
Add Comment