80. பர்ணமணி
வித்ருவின் கோட்டைக்குள் இலக்கென்று ஏதுமின்றி நடந்துகொண்டிருந்தேன். வீடுகள், பண்டகசாலைகள், வைத்தியசாலை, உடற்பயிற்சித் திடல், ஆடல் அரங்கங்கள் என்று அடுத்தடுத்து ஏதேதோ கண்ணில் பட்டு நகர்ந்துகொண்டே இருந்தன. தலைக்கட்டு அணிந்த ஆண்களும் முக்காடிட்ட பெண்களும் சாரி சாரியாகப் போய் வந்துகொண்டிருந்தார்கள். பெரிய பெரிய தானிய மூட்டைகள் அடுக்கப்பட்ட சக்கர வாகனங்களைச் சிலர் எங்கிருந்தோ வேறெங்கோ இழுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மூட்டையின் மீதும் கறுப்பு நிறத்தில் அடையாளக் குறி இடப்பட்டிருந்தது. எனக்குத் துணையாக வந்திருந்த அந்த பிராமணனின் வைசிய சீடன் ஒருவனிடம் அந்த அடையாளக் குறிகள் எதனைச் சுட்டுகின்றன என்று கேட்டேன். ராஜாங்கப் பண்டக சாலையிலிருந்து வெளியே செல்லும் மூட்டைகளின் மீது மட்டும் அந்தக் குறிகள் இருக்கும் என்றும் வியாபாரிகளின் மூட்டைகளுக்குக் கிடையாதென்றும் அவன் சொன்னான். அந்தக் குறிப்பிட்ட மூட்டைகள் ராஜ வைத்திய சாலைக்குச் செல்வதாகவும் சொன்னான்.
எனக்கு ஏன் அப்படிக் கேட்கத் தோன்றியதென்று தெரியவில்லை. ஆனால்,
‘உங்கள் ராஜ வைத்தியசாலையில் உங்கள் குருநாதரிடம் பயின்ற யாராவது வைத்தியராகப் பணி புரிகிறார்களா?’ என்று கேட்டேன்.
‘எனக்குத் தெரியவில்லை ஐயா. ஆனால் இருக்கலாம். கேட்டுப் பார்ப்போம்’ என்று சொன்னான்.
நான் கின்னர பூமியிலிருந்து அதர்வனைக் கொல்லும் உத்தேசத்துடன் வந்திருக்கும் சார சஞ்சாரன். அந்த ஒரு பணியைத் தவிர மற்ற அனைத்தையும் மிகச் சரியாகச் செய்துகொண்டிருப்பது பற்றி இந்நாள்களில் எனக்குத் தீராக் கவலை உண்டாகியிருந்தது. அதனைக் காட்டிலுமே ஒரு பெருங்கவலை அரித்துக்கொண்டிருந்தது. நான் நிறைய கற்பனை செய்யத் தொடங்கிவிட்டேனோ என்பதுதான் அது.
Add Comment