98. மும்முனைக் கருவி
நதியோரமாகவே நடந்துகொண்டிருந்தோம். ஒரு நதி என்பதற்கு அப்பால் அதுவரை சர்சுதியை நான் வேறு எதுவாகவும் கருதியதில்லை. சர்சுதி என்றல்ல. எல்லா நதிகளும் அப்படித்தான். கிராத குலம் வசிக்கும் ஹிமத்தின் மடியிலிருந்து எத்தனையோ நதிகள் புறப்படுகின்றன. கண் திறந்து பார்க்குமிடமெல்லாம் நதிகள்தாம். நதியற்ற இடங்களில் அது கருவுற்றிருக்கும் ஹிமப்பாளங்கள் நிறைந்திருக்கும். அதர்வன் சொன்னது சரி. மச்சங்களுக்கு அது வசிப்பிடம் மட்டுமே. தாழ்வொன்றுமில்லை. அவரவர் சிந்தையில் அவரவர் கண்டடைந்ததன் அடிப்படையில்தான் அவரவர் நம்பிக்கைகள் பிறக்கின்றன. நம்பிக்கை கொள்ளும் அளவுக்குக் கண்டறிய முடியாதவர்கள் இன்னொருவரின் சிந்தையில் நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால், அபாயம் அதில்தான் உள்ளது. இன்னொருவர் சிந்தையின் தரத்தின்மீது வைக்கும் நம்பிக்கை எப்போது வேண்டுமானாலும் சிதறி உதிரும்.
நான் அதர்வனிடம் திரும்பத் திரும்ப அவர்களுடைய நான்கு வர்ணங்களைப் பற்றியும் அதில் வாழ்பவர்களைப் பற்றியும்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். வேத மந்திரங்களில் வர்ணம் குறித்த ஒரு சொல்லும் இல்லை என்றே அவனும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.
‘அப்படியானால், இல்லாத ஒன்றனை எதிலிருந்து பிடித்துக்கொண்டார்கள்?’ என்று கேட்டேன்.
Add Comment