99. ஒரு வினா
‘உனக்குச் சிறிது தனிமை தேவைப்படலாம். நான் அங்கே சென்று அமர்கிறேன்’ என்று சொல்லிவிட்டு ரிஷி சற்றுத் தள்ளி இருந்த தருவின் நிழலை நோக்கிச் சென்றபோது, அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. எதற்கு என்று நான் கேட்கவோ, அதற்கு அவன் விடை சொல்லவோ அவசியமே இல்லை என்பது போல இருந்தது, அவன் திரும்பிப் பாராமல் சென்று அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தது. உண்மையில் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. நாங்கள் அப்போது நின்றுகொண்டிருந்த இடத்திலேயே ஏராளமான மரங்கள் இருந்தன. நதியோரம் முழுவதையும் அவை கவிந்து நிறைத்தே இருந்தன. அமர வேண்டுமென்றால் அவன் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஆனால் எதற்காக நூறு காலடித் தொலைவில் இருந்த தருவை நோக்கி அவ்வளவு விரைவாகச் சென்றான் என்று விளங்கவில்லை. தவிர, தனிமை என்று அவன் குறிப்பிட்டதன் காரணமும் புரியவில்லை. மனத்துக்குள் ஊடுருவிப் படிக்கத் தெரிந்தவன் முன்னால் தனிமையில் இருந்து மட்டும் சாதிக்கப் போவதென்ன?
அவனை நான் ஆழ்ந்து நோக்கியபடி நின்றிருந்தபோது, ‘சகோதரனே..’ என்று கன்னுலா அழைத்தாள். அதிர்ச்சியா, திகைப்பா, பரவசமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கணப் பொழுதில் என் வசமிழந்தேன்.
‘கண்ணே, நீ எங்கே இருக்கிறாய்? எப்படி இருக்கிறாய்?’ என்று நாலாபுறமும் சுற்றித் தேடினேன். புத்தி விழிக்கச் சிறிது நேரம் பிடித்தது. சட்டென்று நதியருகே சென்று குனிந்து நான்கு கை நீரள்ளி முகத்தில் அடித்துக்கொண்டு துடைத்தேன். இரண்டு கை அள்ளிப் பருகினேன்.
‘கன்னுலா..’ என்று அழைத்தபடி கரையேறி வந்தேன்.
‘சகோதரா, உன் பணி நிறைவேறியதா?’
‘முடிந்துவிடும் சகோதரி. அதைப் பற்றிய பதற்றமோ கவலையோ எனக்கில்லை.’
Add Comment