அறிமுகம்
ஆதிமனிதன் உணவுக்காக முதலில் ஓடியிருக்கிறான். பின்னர் விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அவற்றுடன் போராடியிருக்கிறான். விலங்கு சூழ் காட்டில் உயிர்வாழ அவன் மூச்சுவிட்டதற்கும் உணவு உண்டதற்கும் அடுத்தபடியாக சண்டைதான் செய்திருக்கிறான். விலங்குகளுடன் சண்டையிடும்போதே அவற்றின் தாக்கும் திறனைக் கண்டு அதற்கு இணையான எதிர்வினைகளைச் செய்யத்தொடங்கினான்.
கொஞ்சம் வளர்ந்த பின், தன் எல்லைகளை விரித்து வெவ்வேறு இடங்களுக்குக் குடிபெயர்கையில் இன்னொரு பிரதேசத்தின் மனிதனை எதிர்கொள்ளும்போதும் சண்டை செய்திருக்கிறான். விலங்குகளிடமிருந்து தன்னைக் காக்கக் கற்றுக்கொண்ட உத்திகளை இன்னொரு பிரதேசத்து மனிதனின் மீது பிரயோகித்து அவனை அழிப்பதோ அடிமையாக்குவதோ நடந்திருக்கிறது.
இயற்கையாகக் கிடைத்தவற்றை ஆயுதங்களாக்கக் கற்றுக்கொள்கிறான். மனிதனுடைய சண்டைக்கலையில் ஆயுதங்கள் இணைகின்றன. அயர்ந்திருக்கும் நேரத்தில் தாக்கும் உத்தியை விலங்குகளிடமிருந்து கற்றவன், அதை மனிதர்களின் மீது பிரயோகிக்கிறான். ஆயுதங்களுடன் தந்திரமும் மனிதனின் சண்டைக்கலையில் இணைந்துகொள்கிறது. உடல் திறன், ஆயுதம், தந்திரம் இம்மூன்றிலும் சிறந்தவனே கற்காலம் முதலாக இன்று வரையில் சண்டைக்கலையில் வெல்கிறான்.
Add Comment